பாஜக வேட்பாளர்கள்.. 33 சிட்டிங் எம்பிக்களுக்கு 'நோ' சீட்.. மாநிலங்களில் யார் யார் 'கெட் அவுட்'?
டெல்லி: லோக்சபா தேர்தலுக்காக பாஜக நேற்று தமது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 195 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 33 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.

லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றன. இந்த நிலையில் பாஜக நேற்று 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 34 மத்திய அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட 195 தொகுதிகளில் 35 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் 5, சத்தீஸ்கரில் 4, டெல்லியில் 5, ம.பியில் 7, ராஜஸ்தானில் 5, குஜராத்தில் 5 புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர்களான சிவராஜ் சிங் சவுகான், பிப்லாப் தேப் ஆகியோரும் லோக்சபா தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலத்தில் 5 புதுமுகங்களை களமிறக்கி உள்ளது பாஜக. சிட்டிங் எம்பிக்களான ராமேஸ்வர் டெலி, ராஜ்தீப் ராய், ஹோரன் சிங், குயீன் ஓஜா பல்லாப் லோசன் தாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் 4 புதுமுகங்களுக்கு வாய்ப்பு தந்துள்ளது பாஜக. ராய்ப்பூர் தொகுதியில் பிர்ஜ்மோகன் அகர்வால், ஜன்ஜிர் சம்பாவில் கம்லேஷ் ஜாங்டே, மகாசமுத்தில் ரூப் குமாரி சவுத்ரி, கான்கெரில் மோகன் மாதவி வேட்பாளரகளாக போட்டியிடுகின்றனர். சிட்டிங் எம்பிக்கள் சுனில் குமார் சோனி, குஹராம் அஜ்கலே, சன்னி லால் சாஹூ, போஜ்ராஜ் நாக் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.
டெல்லி: டெல்லியில் ரமேஷ் பிதுரி, பர்வேஸ் வர்மா, மீனாக்ஷி லெகி, ஹர்ஷ் வர்தன் ஆகிய சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை. மறைந்த மூத்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மகள், பன்சூரி ஸ்வராஜ் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். புது டெல்லி தொகுதி பாஜக வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு டெல்லியில் கமல்ஜீத் ஷெராவத், தெற்கு டெல்லியில் எம்.எல்.ஏ. ராம்வீர் சிங் பிதூரி, சாந்தினி சவுக் தொகுதியில் பிரவீன் காடெல்வால் போட்டியிடுகின்றனர்.
குஜராத்: குஜராத்தில் 5 சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் தரப்படவில்லை. சிட்டிங் எம்.பிக்களான பிரபாத்பாய் சவபாய் பட்டேல், 3 முறை எம்பியாக இருந்த கிரீத் சோலங்கி, மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா, ரமேஷ்பாய் லவ்ஜிபாய் டாடுக், ரத்னசிங் மகான்சிங் ரதோட் ஆகியோருக்கு மீண்டும் சீட் கொடுக்கவில்லை.
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா (யஷ்வந்த் சின்ஹா மகன்), 3 முறை எம்பியான சுதர்ஷன் பகத் ஆகியோருக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மத்திய பிரதேசம்: இம்மாநிலத்தில் 7 புதுமுகங்களை பாஜக களமிறக்கி உள்ளது. விவேக் நாராயண் சேஜ்வால்கெர், கிருஷ்ணபால் சிங் யாதவ், ராஜ்பகதூர் சிங், ராம்கந்த் பகர்வா, சாத்வி பிரக்யா தாக்கூர், குணம்சிங் தாமோர் ஆகிய சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்: இம்மாநிலத்திலும் 5 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. சாரு, பரத்பூர், ஜலோர், உதய்பூர், பன்ஸ்வாரா தொகுதிகளில் புதுமுகங்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மே.வங்கம், திரிபுரா: திரிபுராவில் சிட்டிங் எம்பி பிரதிமா போமுயிக்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தேப் போட்டியிடுகிறார். மேற்கு வங்கத்தில் சிட்டிங் எம்பி ஜான் பர்லாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.












Click it and Unblock the Notifications