லோக்சபா தேர்தல் 2024: அறிவிப்பு எப்போது? எத்தனை கட்டமாக தேர்தல் நடைபெறும்? கசிந்த தகவல்
டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லோக்சபா தேர்தல் அறிவிப்பு மார்ச் 2-வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற லோக்சபாவின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது . எனவே அதற்குள் புதிய அரசை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இதனால், வரும் ஏப்ரல் மே மாதங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கீடு , வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் எப்போது?: மத்தியில் ஆளும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அண்மையில் வெளியிட்டது. நாளை இரண்டாம் கட்ட ஆலோசனையை அக்கட்சி நடத்த உள்ளது. அதேபோல், எதிர்க்கட்சிகளும் மோடியை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றன.
7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்?: இந்த நிலையில், லோக்சபா தேர்தலுக்கான தேதி மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, வரும் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு தேர்தலை போல இம்முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபெறலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதன்படி பார்த்தால் தேர்தல் நடத்தை விதிகள் வரும் மார்ச் 14 ஆம் தேதிக்கு பிறகு அமலுக்கு வந்துவிடும் என்றே தெரிகிறது.
கடந்த தேர்தல் எப்போது நடந்தது?: கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் தேதி மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியாகின. எனவே 2024 தேர்தல் தேதியும் இதை ஒட்டியே வெளியாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிரசாரமும் தற்போதே அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.












Click it and Unblock the Notifications