லோக்சபா தேர்தல் காலிறுதி கேம் 2: மேகாலயாவில் பாஜகவுக்கு மரண பயம் காட்டும் வாய்ப்பை தொலைத்த காங்கிரஸ்
டெல்லி: லோக்சபா தேர்தல் அரை இறுதி ஆட்டம் போல தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. லோக்சபா தேர்தலுக்கான காலிறுதி ஆட்டம் போல இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த 4 மாநில சட்டசபை தேர்தல்கள் அமைந்தன. அதில் மேகாலயா மாநிலமும் ஒன்று.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் மாநில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இம்மாநிலம் முன்னர் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது என்பதும் வரலாறுதான். மேகாலயாவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள்.

மேகாலயா தேர்தல் களம்: தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57, காங்கிரஸ் 60 , திரிணாமுல் காங்கிரஸ் 56, பாஜக 60, ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) 46, வாய்ஸ் ஆப் பீப்பிள் கட்சி 18, ஹெச்பிடிபி 11, பிடிஎப் 9, ஆர்பிஐ( அத்வாலா) 8, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 3, காரோ நேஷனல் கவுன்சில் 2, ஆர்பிஐ 2 தொகுதிகளில் போட்டியிட்டன.
கூட்டணி இல்லை: மேகாலயா தேர்தல் களத்தில் கூட்டணிகள் இல்லாமல் அத்தனை கட்சிகளும் தனித்தே களம் கண்டன. பாஜகவும் கூட்டணி அமைக்கவில்லை. பாஜகவின் கூட்டணியில் இருந்த ஆர்பிஐ(அத்வாலே) தனித்தே போட்டியிட்டது. இன்று உருவாகி இருக்கும் 'இந்தியா' கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், ஜேடியூ, திரிணாமுல் கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.
மேகாலயா தேர்தல் முடிவுகள்: மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மைக்கான 31 இடங்களைப் பெறவில்லை.
என்பிபி- 26
யுடிபி- 11
திரிணாமுல் காங்கிரஸ்-5
காங்கிரஸ்- 5
விபிபி- 4
ஹெச்பிடிபி- 2
பிடிஎப்-2
பாஜக- 2
சுயேட்சைகள்-2
தொங்கு சட்டசபையும் கூட்டணி அரசும்: மேகாலயா மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தன. அதேபோல் தொங்கு சட்டசபைதான் அமைந்தது. இதனால் இம்மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. மேகாலயாவில் தற்போது என்பிபி, யுடிபி, பாஜக ஹெச்பிடிபி, சுயேட்சைகள் இணைந்து 46 எம்.எல்.ஏக்கள் பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளன. எதிர்க்கட்சிகள் வரிசையில் 14 எம்.எல்.ஏக்கள் உள்ளன.
"இந்தியா" கூட்டணி: லோக்சபா தேர்தலில் பாஜக- "இந்தியா" கூட்டணி என தேசிய அளவில் களம் உருவாகி இருக்கிறது. மேகாலயா சட்டசபை தேர்தலின் போது 'இந்தியா' கூட்டணிக்கு முன்னோட்டமாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஜேடியூ இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் அதிக இடங்களைப் பெற்ற என்பிபிக்கு சவாலாக இருந்திருக்கலாம்; மேகலாயாவில் "இந்தியா" கூட்டணி பங்கேற்ற கூட்டணி ஆட்சியும் அமைந்திருக்கக் கூடும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications