கமல்நாத் பஞ்சாயத்தே முடிவுக்கு வரலை.. காங்கிரஸை விட்டு பாஜகவுக்கு ஓடப் போறாரா மணீஷ் திவாரி?
டெல்லி: மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை போல மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியும் பாஜகவுக்கு தாவப் போவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், மகனுடன் பாஜகவுக்கு தாவப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் தலையீடுகளை விரும்பாமல் தனி ராஜ்ஜியம் நடத்தியவர் கமல்நாத்.

ம.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு கமல்நாத்தான் காரணம் என்பது பொதுவான குற்றச்சாட்டு. தேர்தலின் போது டெல்லி மேலிடம் அனுப்பிய எந்த ஒரு மேலிடப் பார்வையாளருக்கும் கமல்நாத் ஒத்துழைப்பு தராமல் டார்ச்சர் செய்தது; வேட்பாளர்கள் தேர்வில் தன்னிச்சையாக செயல்பட்டது உள்ளிட்ட காரணங்கள் கமல்நாத்துக்கு எதிராக அடுக்கப்பட்டன. இதனைப் பற்றி எல்லாம் கமல்நாத் கவலைப்படவே இல்லை. இதனால் கமல்நாத்துடன் பேசுவதையே ராகுல் காந்தி நிறுத்திவிட்டாராம்.
இந்த நிலையில் ராஜ்யசபா எம்பி பதவி கேட்டு டெல்லி மேலிடத்தின் கதவுகளைத் தட்டிப்பார்த்தாராம் கமல்நாத். அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதால் ராஜ்யசபா சீட் தர முடியாது என சொல்லிவிட்டதாம் டெல்லி. இதனைத் தொடர்ந்து மகனுடன் சேர்ந்து கமல்நாத், பாஜகவுக்கு தாவப் போகிறார் என தகவல்கள் பறந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ, இந்திரா காந்தியால் 3-வது மகன் என அழைக்கப்பட்டவர் கமல்நாத். அவர் காங்கிரஸுக்கு துரோகம் செய்யமாட்டார் என விளக்கம் அளித்து கொண்டே தங்களை தேற்றி வருகின்றனர்.
தற்போது கமல்நாத்தைப் போல மணீஷ் திவாரியும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேரப் போகிறார் என ஊடக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அத்துடன் லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து மணீஷ் திவாரி பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்கின்றன அச்செய்திகள்.
ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகமோ, இது அப்பட்டமான வதந்தி.. நேற்று இரவு கூட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களது இல்லத்திலேயே தங்கியிருந்தார் மணீஷ் திவாரி எனவும் விளக்கம் கொடுத்துள்ளது. எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?












Click it and Unblock the Notifications