மும்பையில் மோடி, கெஜ்ரிவால்.. ரேபரேலியில் ராகுலை ஆதரித்து சோனியா, அகிலேஷ் யாதவ் இன்று பிரசாரம்!
டெல்லி: 5-வது கட்ட லோக்சபா தேர்தலுக்காக பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரசாரம் மேற்கொள்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது தாயாரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி இன்று பிரசாரம் செய்கிறார்.
18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 என 4 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. மே மாதம் 20-ந் தேதி நடைபெற உள்ள 5-வது கட்ட தேர்தலில் 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, ஒடிஷா, உ.பி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

5-வது கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளார். ராகுல் காந்தி கடந்த முறை தோல்வி அடைந்த உ.பி. அமேதி தொகுதியில் காங்கிரஸின் கே.எல்.ஷர்மா நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் காண்கிறார். உ.பி. லக்னோ லோக்சபா தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். பீகார் சாரன் தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா களம் காண்கிறார். மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே, கல்யாண் தொகுதியில் போட்டியிடுகிறார். மும்பை வடக்கு லோக்சபா தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் களம் காண்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இன்று மகாராஷ்டிராவின் மும்பையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது தாயாரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார். ரேபரேலி தொகுதியில்தான் சோனியா காந்தி போட்டியிட்டு வென்று வந்தார். இம்முறை ராஜ்யசபா எம்பியாகிவிட்டார் சோனியா காந்தி. இதனால் ராகுல் காந்தி, ரேபரேலியில் போட்டியிடுகிறார். இந்திரா குடும்பத்தின் இன்னொரு முக்கியமான தொகுதியான அமேதியில் கேஎல் ஷர்மா போட்டியிடுகிறார். ரேபரேலியில் சோனியா பொதுக் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications