பாஜகவுக்கு விழும் அடி.. வடகிழக்கில் முந்தும் ‛இந்தியா’.. மணிப்பூர் எப்படி? லோக்சபா தேர்தல் கணிப்பு
டெல்லி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. இதற்கிடையே தான் தற்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வடகிழக்கு மாநிலங்களில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை விட ‛‛இந்தியா'' கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்த தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளையில் பாஜகவும் எதிர்க்கட்சிகளை சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சனம் செய்துள்ளது. ஊழல் செய்தவர்கள் அனைவரும் தங்களை பாதுகாக்க ஓரணியில் இணைந்துள்ளனர். இவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்தப்படுவார்கள் என பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் அவர்களும் முதற்கட்ட மீட்டிங்கை நடத்தி முடித்துள்ளனர்.
பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைவரும் நாடாளுமன்ற பணிகளை இப்போது இருந்தே துவங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் மாநிலங்கள் வாரியாக அந்தந்த கட்சிகள் சர்வேக்களை தொடங்கி உள்ளன. அதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் கருத்து கணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வடகிழக்கு மாநிலங்களுக்கான கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை விட எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திரிபுரா, நாகலாந்து, மிசோராம், மணிப்பூர், மேகாலயா உள்ளிட்டவை வடகிழக்கு மாநிலங்களாக உள்ளன. இத்தகைய சூழலில் தான் ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா'' சார்பில் அந்தந்த மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மாநிலங்கள் அளவில் மிகவும் சிறியவை. நாகலாந்து, மிசோராமில் தலா ஒரு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே இருக்கும் நிலையில் மற்ற 3 மாநிலங்களில் தலா 2 தொகுதிகள் என மொத்தம் 6 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அந்த வகையில் பார்த்தால் 5 மாநிலங்களிலும் மொத்தம் 8 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திரிபுரா மாநிலத்தில் உள்ள தலா 2 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜகவின் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணிகள் தலா ஒரு இடங்களை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்தில் ஒரு தொகுதி உள்ள நிலையில் அதனை பாஜகவின் என்டிஏ கூட்டணி கைப்பற்றும் எனவும், மிசோராமில் உள்ள ஒரு தொகுதியில் ‛இந்தியா' கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக மேகலாயாவில் உள்ள 2 தொகுதிகளிலும் ‛இந்தியா' கூட்டணி தான் வெற்றி பெறும். இங்கு பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதுவிர கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நடந்து வருகிறது. அங்கு 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் இதில் ‛இந்தியா' கூட்டணி ஒரு தொகுதியிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி இன்னொரு தொகுதியிலும் வெற்றி பெறும் என ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 8 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 3 இடங்களும், எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணிக்கு 5 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications