தேர்தல் ஆயுதமாகும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது-டெல்லியில் மார்ச் 31-ல் மாஸ் காட்டும் "இந்தியா" கூட்டணி!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் மார்ச் 31-ந் தேதி "இந்தியா" கூட்டணி சார்பாக பிரம்மாண்ட கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கும் நிலையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஒட்டுமொத்த "இந்தியா" கூட்டணி கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அடுத்தடுத்து 2 மாதங்களில் கைது செய்திருப்பதும் இந்தியா கூட்டணி தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அத்துடன் அடுத்து மத்திய விசாரணை ஏஜென்சிகளால் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புள்ள முதல்வர் யார் என்கிற விவாதமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜிர்வால் கைதை தேர்தல் ஆயுதமாக கையில் எடுக்கவும் "இந்தியா" கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் மார்ச் 31-ந் தேதி "இந்தியா" கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் கூறுகையில், ஜனநாயகமும் இந்த தேசமும் பேராபத்தில் சிக்கி இருக்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க டெல்லியில் பிரம்மாண்ட பேரணி, பொதுக் கூட்டத்தை மார்ச் 31-ந் தேதி இந்தியா கூட்டணி நடத்த இருக்கிறது என்றார்.
காங்கிரஸ் கட்சியின் டெல்லி யூனியன் பிரதேச தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், மார்ச் 31-ந் தேதி நடைபெறும் பேரணி, பொதுக் கூட்டம் என்பது அரசியலுக்கானது அல்ல. ஆனால் தேசத்தைப் பாதுகாப்பதற்கானது. அடக்குமுறைக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குரலை வெளிப்படுத்தவே மார்ச் 31-ந் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒன்று திரளுகின்றனர் என்றார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள் விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications