டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம்: ஸ்டாலின், மமதா, நிதிஷ், பவார், கெஜ்ரிவால் பங்கேற்பு!
டெல்லி: பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜகவுக்கு எதிரான பெரும்பாலான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து "இந்தியா" கூட்டணிக் கூட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் பெங்களூர், மகாராஷ்டிராவின் மும்பையில் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் "இந்தியா" கூட்டணி என்பதை அதை உருவாக்கிய கட்சிகளே மறந்துவிட்டன. இது "இந்தியா" கூட்டணிக்குள்ளேயே அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது. 5 மாநில தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தெலுங்கானாவில் ஆட்சி அமைத்துள்ளது காங்கிரஸ். மிசோரமிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் அதில் பங்கேற்க முடியாது என அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து டிசம்பர் 19-ல் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
#WATCH | Meeting of the INDIA Alliance begins, in Delhi.
— ANI (@ANI) December 19, 2023
(Source: AICC) pic.twitter.com/a1WKjhN61U
யார் யார் பங்கேற்பு?: இதையடுத்து டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சித் பரூக் அப்துல்லா, இடதுசாரித் தலைவர்கள் டி ராஜா, சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications