மீண்டும் லோக்சபா சபாநாயகராகும் ஓம் பிர்லா.. இதற்கு முன் 2 முறை பதவி வகித்தவர்கள் யார் யார்?
டெல்லி: 18-வது லோக்சபா சபாநாயகர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லா வெல்லக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. லோக்சபா சபாநாயகராக ஏற்கனவே 4 பேர் 2 முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
18-வது லோக்சபா சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஓம் பிர்லா, இந்தியா கூட்டணியின் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் களம் காண்கின்றனர். 3 முறை எம்பியாக வெற்றி பெற்றவர் ஓம் பிர்லா. 17-வது லோக்சபா சபாநாயகராகவும் பதவி வகித்தவர். ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த போதுதான் 115 எதிர்க்கட்சி எம்பிக்களை கூண்டோடு சஸ்பெண்ட் செய்தவர் என்ற சர்ச்சையையும் எதிர்கொண்டவர். லோக்சபா துணை சபாநாயகரே இல்லாமல் சபையை நடத்திய முதல் சபாநாயகரும் ஓம் பிர்லாதான்.

லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா பதவி வகித்த காலத்தில்தான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்கம், புதிய நாடாளுமன்றம் திறப்பு, ராமர் கோவில் திறப்பு, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றம், திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா தகுதி நீக்கம், லோக்சபாவுக்குள் வண்ணக் குப்பிகள் வீச்சு என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தன.
லோக்சபாவில் எம்பிக்கள் பலத்தின் அடிப்படையில் ஓம் பிர்லாவுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் ஓம் பிர்லாதான் மீண்டும் லோக்சபா சபாநாயகராகக் கூடும்.
லோக்சபா சபாநாயகர்களாக இருந்த ஐயங்கார், தில்லான், பல்ராம் ஜாக்கர், பாலயோகி ஆகியோர் 2 முறை பதவி வகித்துள்ளனர். ஆனாலும் பல்ராம் ஜாக்கர் மட்டுமே 5 ஆண்டுகாலம் முழுமையாக லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார்.












Click it and Unblock the Notifications