ஸ்டாலின் பெயரை சொன்னதும்.. டிஆர் பாலுவை கிண்டல் செய்த ஓம்பிர்லா.. என்ன இப்படி சொல்லிட்டாரு?
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொகுதி மறுவரையறை செய்வதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விவாதத்தில் திமுக எம்பி டிஆர் பாலு, முதல்வர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு பேசியபோது சபாநாயகர் ஓம்பிர்லா கிண்டல் செய்த சம்பவம் நடந்தது.
நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு கடந்த 2023ல் மசோதா நிறைவேற்றியது. அதுதொடர்பான திருத்த மசோதா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொகுதி மறுவரைவு செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற 3 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் மாநிலங்களுக்கான தொகுதி மறுவரையறை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலும், யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அறிமுகம் செய்தனர்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்பட பல கட்சிகளின் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தமிழக கூட்டணி கட்சி எம்பிக்கள் கருப்பு நிற சட்டை அணிந்து நாடாளுமன்றம் சென்றிருந்தனர். திமுக எம்பி டிஆர்பாலு பேசியதாவது:
''திமுக, தொகுதி வரையறை மசோதாவை கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். ஒவ்வொரு மசோதாக்களையம் தனித்தனியாக தாக்கல் செய்து விவாதிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு சாண்ட்விஜ் போல் அனைத்தையும் இன்டர்லிங் செய்துள்ளது. இதனால் ஒவ்வொரு மசோதாவையும் சபை உறுப்பினர்கள் பின்பற்றுவது சிரமமாக இருக்கும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023ல் நிறைவேற்றப்பட்டது. அதனை மீண்டும் இப்போது கொண்டு வர தேவையில்லை. 2024, 2025 ஆகிய ஆண்டுகளை விட்டுவிட்டு இப்போது கொண்டு வருவது ஏன்? எங்களின் தலைவர் ஸ்டாலின் நேற்று நடந்த சேலம் பொதுக்கூட்டத்திலேயே கருப்பு கொடி உயர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். தொகுதி மறுவரை மசோதா நகலை எரித்தார்'' என்றார்.
இந்த வேளையில் சபாநாயகர் ஓம்பிர்லா, கேலியாக சிரித்துவிட்டு, ''நீங்கள் கருப்பு கொடி காட்டினால் என்னால்.. மஞ்சள் கொடி காட்டினால் என்ன? ஸ்டாலின் எதிர்த்த பின் நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள்?'' என கிண்டலாக தெரிவித்தார். இதனை கேட்டவுன் அங்கிருந்த மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் சிரித்தனர். அதற்கு டிஆர் பாலு,'' நாங்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications