லோக்சபா சபாநாயகர்: ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை தோல்வி- "இந்தியா" கூட்டணி தலைவர்கள் கடும் அதிருப்தி!
டெல்லி: 18-வது லோக்சபா சபாநாயகரை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்வதில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொன்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், "இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் லோக்சபா சபாநாயகரை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
18-வது லோக்சபா கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இன்றும் லோக்சபாவில் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். எம்பிக்கள் பதவியேற்பு இன்றுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து லோக்சபா சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறும். லோக்சபா சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று 12 மணியுடன் நிறைவடைகிறது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை ஆளும் பாஜக கூட்டணி இன்னும் அறிவிக்கவில்லை. 17-வது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, தற்போதைய லோக்சபாவின் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப், தற்காலிக துணை சபாநாயகர் ராதாமோகன் சிங், புரந்தேஸ்வரி ஆகியோரில் ஒருவரை பாஜக தரப்பு லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது.
"இந்தியா" கூட்டணியைப் பொறுத்தவரை லோக்சபா சபாநாயகர் பதவி என்பது போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்; ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு தரப்பு எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் எதிர்க்கட்சிகளுடன் நடத்த முன்வரவில்லை என அந்த அணியின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இடதுசாரி கட்சிகளில் ஒன்றான புரட்சிகர சோசலிஸ்ட், இந்தியா கூட்டணி சார்பில் லோக்சபா சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் அடங்கிய குழு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் போட்டியின்றி லோக்சபா சபாநாயகரை தேர்வு செய்ய மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர இந்தியா கூட்டணி வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு தரப்பு இதனை ஏற்காததால் ராஜ்நாத் சிங் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications