பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி- அரவிந்த் கெஜ்ரிவால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் காங்கிரஸ்!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளுக்கு பின்னடைவாக ஆம் ஆத்மியை காங்கிரஸ் கட்சி மிக கடுமையாக விமர்சித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் ஆம் ஆத்மி தொடர்ந்து நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக கடந்த 23-ந் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 6 மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முடிவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.

அத்துடன் டெல்லி மாநில மசோதா தொடர்பாக காங்கிரஸ் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கி அறிக்கை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் தமது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதில் கொடுத்துள்ளார். அதில், ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், சிறைக்கு போக தயாராக இருக்கிறார். அதனைத் தவிர்க்கவே பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறார். இதனால் காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கிறார். ஊழல் பணத்தில்தான் காங்கிரஸுக்கு எதிராக பல மாநிலங்களில் ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிட்டது. காங்கிரஸின் வெற்றியைப் பறித்து பாஜகவுக்கு உதவியது ஆம் ஆத்மிதான் என சாடியிருக்கிறார் அஜய் மக்கான். இதனால் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் தொடர்ந்து நீடிக்குமா? என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications