ஜஸ்ட் 2% ஓட்டு தான் மிஸ்! லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் ‛இந்தியா’ கூட்டணி? - கருத்து கணிப்பு
டெல்லி: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுதொடர்பான பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பார்த்தால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியை விட 2 சதவீத ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெறும் எனவும், இருகூட்டணிக்கு ஆட்சியை பிடிப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமரானார். இந்நிலையில் தான் மீண்டும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இன்னும் தேர்தலுக்கு 7 முதல் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.
அதன்படி அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கவும், மோடியை 3வது முறையாக பிரதமராக்கவும் பாஜக திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஆம்ஆத்மி, காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் 2 ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த மாத இறுதியில் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. உண்மையில் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி என்பது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்த கூட்டணியில் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட பல பெரிய கட்சிகள் உள்ளன. நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில் 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளது உண்மையில் பாஜகவுக்கு பிரச்சனையாகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' அமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மாநிலங்கள் வாரியாக கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தற்போதைய சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்பட்சத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி பெறும் ஓட்டு சதவீதம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி தான் அதிக ஓட்டுகளை பெறும் எனவும், ‛இந்தியா' கூட்டணி 2வது இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவின் என்டிஏ கூட்டணி 43 சதவீத ஓட்டுகளை பெறும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 2 சதவீதம் குறைந்து ‛இந்தியா' கூட்டணி 41 சதவீத ஓட்டுகளையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் சேராதவர்கள் 16 சதவீதம் வரை ஓட்டுகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 21ம் தேதி ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' அமைப்பு வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 255 தொகுதிகளிலும் வெல்லும் எனவும், ‛இந்தியா' கூட்டணி 243 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மற்றவர்கள் 45 தொகுதிகளை பிடிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை பொறுத்தவரை மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் ஒரு கட்சிக்கு லோக்சபாவில் 272 எம்பிக்களின் ஆதரவு தேவை.
ஆனால் ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பின்படி பாஜகவின் என்டிஏ மற்றும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான அளவு எம்பிக்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இவர்கள் கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளின் எம்பிக்களின் ஆதரவுடன் தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications