யுபிஎஸ்சி நேரடி நியமனம் ரத்து- அரசியல் சாசனமே வென்றது.. மல்லிகார்ஜூன கார்கே பெருமிதம்!
டெல்லி: மத்திய அரசுப் பணிகளில் அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்யும் அறிவிப்பை மத்திய பாஜக அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் அரசியல் சாசனம் வென்றுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளுக்கு நேரடி நியமனம் போன்ற பாஜகவின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம்; அரசியல் சாசனத்தின் மூலம் இடஒதுக்கீடு முறையைப் பாதுகாப்போம் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.
யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதில் 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர், துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான நியமன அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்த நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை. இதில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருந்தால் 22 முதல் 23 இடங்கள் தலித், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால் நேரடி நியமனம் என யுபிஎஸ்சி அறிவித்திருப்பதால் இந்த இடஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்பது காங்கிரஸ், ஆர்ஜேடி, திமுக உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜேடியூ, எல்ஜேபி மற்றும் பாமக ஆகியவையும் மத்திய அரசின் இந்த நேரடி நியமனத்தைக் கடுமையாக எதிர்த்தன.

இதனையடுத்து அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் அறிவிக்கையை ரத்து செய்ய யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அரசின் நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் சாசனத்துக்குக் கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்சியில் இடஒதுக்கீடு இல்லாமல் நியமனம்- பாஜக கூட்டணியில் பிளவு! ஜேடியூ, எல்ஜேபி கடும் எதிர்ப்பு!
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், நேரடி நியமனம் போன்ற பாஜக அரசின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம். நாட்டின் அரசியல் சாசனம் மூலமாக இடஒதுக்கீட்டு முறையைப் பாதுகாப்போம் என்றார்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்ம் மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை ரத்து செய்யும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சமூகநீதியை காக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் உயர்பதவிகளில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை நேரடியாக நியமிக்கும் முறையில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது என்பதால், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு இந்த பதவிகள் கிடைக்காத நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன்படியே இந்த முறை நியமன அறிவிப்பை ரத்து செய்யும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
காலம் காலமாக இழைக்கப்பட்டு வரும் அநீதியை போக்கவும், உள்ளடக்கியத் தன்மையை ஏற்படுத்தவும் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் நமது சமூகநீதிக் கட்டமைப்பின் அடித்தளம் என்பதிலும், மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமனங்கள் செய்யப்பட்டாலும் அதிலும் சமூகநீதி தத்துவம் இணைக்கப்பட வேண்டும் என்பதிலும் பிரதமர் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருப்பதாக பிரதமர் அலுவலகத்திற்கான மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருப்பது நம்பிக்கையளிக்கிறது. மத்திய அரசுப் பணிகளில் சமூகநீதி என்பது என்ன விலை கொடுத்தாலும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர், இயக்குனர்கள் உள்ளிட்ட நிலைகளில் தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிப்பதாக இருந்தாலும், தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் செய்யப்படும் நியமனங்களாக இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நிலைப்பாட்டை ஒட்டி, அதில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும். இதை கொள்கை அறிவிப்பாகவே மத்திய அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications