நாசியில் நேரடியாக செலுத்தப்படும் புதிய தடுப்புமருந்து..கொரோனா பரவலை கட்டுப்படுத்த மிக முக்கியம்..ஏன்
டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் நாசி தடுப்பூசி மூலம் சிறார்களுக்கு மிக எளிதாகத் தடுப்பூசிகளைச் செலுத்த முடியும் என்பதால் அவை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 18+ அனைவருக்கும் மட்டுமே தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா 2ஆம் அலையில் சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியாமல் போகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசி தடுப்பூசி
இது குறித்து உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் நாசி தடுப்பூசிகள் (nasal vaccines) குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானதாக அமையக் கூடும். இதன் மூலம் மிக எளிதாகத் தடுப்பூசியைக் குழந்தைகளுக்குச் செலுத்த முடியும். சுவாசப் பாதையிலிருந்தே அதன் பாதுகாப்பு தொடங்கிவிடுகிறது. ஆனால், நாசி தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வருவது கடினம்.

என்ன வழி
அதுவரை நாம் குழந்தைகளைப் பாதுகாக்க வைத்திருக்க வேண்டும். இதற்கு ஒரே வழிதான் உள்ளது. அதாவது அதிகப்படியான இளைஞர்களுக்கு, குறிப்பாக ஆசிரியர்கள் மிக வேகமாக தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும். இதைத்தான் மற்ற நாடுகளும் செய்துள்ளன. அப்போது தான் பள்ளிகள் தொடங்கப்பட்ட பிறகு, குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவல் குறைக்க முடியும்" என்று அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளைத் தாக்கும் கொரோனா
முன்னதாக நேற்று குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவல் பற்றிப் பேசிய நிதி ஆயோக் குழு உறுப்பினர் விகே பால், குழந்தைகள் மத்தியில் கொரோனாவின் பாதிப்பு குறைவாகவே உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எவ்வித அறிகுறிகளையும் காட்டுவதில்லை அல்லது மிகக் குறைவான அறிகுறிகளை மட்டுமே காட்டுகின்றனர். மேலும், அவர்களுக்கு மருத்து சிகிச்சைகளும் பெரும்பாலும் தேவைப்படாது.

மருத்துவ வசதிகள்
உலகளவிலும் சரி, இந்தியாவிலும் சரி கொரோனாவால் பாதிக்கப்படும் சிறார்களில் 3 முதல் 4% மட்டுமே மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது. குறிப்பாக 10 முதல் 12 வயதுடையவர்களுக்கு அதிக கவனம் தேவை. கொரோனாவால் பாதிக்கப்படும் சிறார்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வசதிகளை நாம் மேம்படுத்த வேண்டும். ஆனால், இதையெல்லாம்விட முக்கியம் சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதையே நாம் தடுக்க வேண்டும். வைரஸ் பரவலின் சங்கிலியை நாம் உடைக்க வேண்டும். அதுதான் அனைத்தயைும் விட முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications