ஆபரேஷன் சிந்தூர்: "பிரதமர் மோடியின் காலடியில் ராணுவ வீரர்கள்”.. ம.பி துணை முதல்வர் பேச்சால் சர்ச்சை!
டெல்லி: "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மொத்த நாடும், ராணுவ வீரர்களும்" பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து வணங்கினர்" என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்தா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில துணை முதலமைச்சர் ஜகதீஷ் தேவ்தா கூறிய கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இன்று (மே16) நடந்த சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கான பயிற்சி அமர்வில் அம்மாநில துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்ரா பேசினார். அப்போது, ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும், பிரதமர் மோடியின் காலடியில் விழுந்ததாக அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜகதீஷ் தேவ்ரா பேசுகையில், "நாம் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும், ராணுவ வீரர்களும் பிரதமரின் காலடியில் விழுந்தனர். ஒட்டுமொத்த தேச மக்களும் பிரதமரின் காலடியில் கிடந்தனர்" என்று கூறியுள்ளார்.
ஜகதீஷ் தேவ்ரா பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி, உடனடியாக ஜகதீஷ் தேவ்தா துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் எக்ஸ் சமூக வலைதள பதிவில், "ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும் பிரதமர் மோடியின் காலடியில் விழுந்ததாக ஜகதீஷ் தேவ்தா கூறுகிறார். இவர் பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சர். ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சர் இவ்வாறு கூறுவது அர்ப்பத்தனமானது, வெட்கக்கேடானது.
இது நமது ராணுவ வீரர்களின் வீரத்திற்கும் தைரியத்திற்கும் இழுக்கு. ஒட்டுமொத்த தேசமும் ராணுவ வீரர்களை எண்ணி பெருமைப்படும் போது அவர்களை பாஜக இவ்வாறு சிறுமைப்படுத்துகிறது. இதற்காக பாஜகவும் ஜகதீஷ் தேவ்தாவும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மேலும் பாஜக ஆட்சியில் இருந்து விலக வேண்டும்" என வலியுறுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி, "பாஜக தலைவர்கள் நமது ராணுவத்தை தொடர்ந்து அவமதிப்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது" என்று விமர்சித்துள்ளார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தான் தெரிவித்த கருத்து ஜகதீஷ் தேவ்தா விளக்கம் அளித்துள்ளார். "எனது பேச்சை காங்கிரஸ் கட்சி திரித்து, தவறான வழியில் வெளியிடுகிறது. எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நமது ராணுவம் மிகப்பெரிய சேவையை ஆற்றியதாகத்தான் நான் கூறினேன். ராணுவத்தை இந்திய மக்கள் பணிந்து வணங்கியதாகவும் குறிப்பிட்டேன்" என்று ஜகதீஷ் தேவ்தா விளக்கம் அளித்துள்ளார்.
கர்னல் சோஃபியா குரேஷியை "பயங்கரவாதிகளின் சகோதரி" என்று குறிப்பிட்டு மத்திய பிரதேச அமைச்சர் விஷய் ஷா பாஜகவை சர்ச்சையில் சிக்க வைத்த அடுத்த சில நாட்களில் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து இந்திய ராணுவத்தினர் வணங்குவதாகக் கூறி, ம.பி மாநில துணை முதல்வர் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications