மகாராஷ்டிரா முதல்வர்: பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் டெல்லியில் 'டேரா'- அமித்ஷாவுடன் ஆலோசனை!
டெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் பதவி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக மகாயுதி கூட்டணியின் தலைவர்களான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மேலிடத் தலைவர்களை மகாயுதி கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வாரம் 23-ந் தேதி எண்ணப்பட்டன. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரமாகிவிட்ட நிலையிலும் பாஜக கூட்டணி புதிய ஆட்சியை அமைக்கவில்லை.

மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் நேற்று முன்தினமே முடிவடைந்துவிட்டது. இடைக்கால முதல்வராக ஏக்நாத் ஷிண்டே நீடித்து வருகிறார். ஆனாலும் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததால் உடனே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி வலியுறுத்துகிறது.
மகாயுதி கூட்டணியில் முதல்வர் பதவி எந்த கட்சிக்கு என்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை அதிக இடங்களில் வென்றதால் தங்களுக்குதான் முதல்வர் பதவி என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே தரப்போ, பீகாரில் குறைவான இடங்களில் வென்ற நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவி தரப்பட்ட பார்முலாவின் அடிப்படையில் எங்களுக்குதான் முதல்வர் பதவி என்கிறது. அஜித்பவார் தரப்பு, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த பின்னணியில் தானேவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் பதவி தொடர்பாக பிரதமர் மோடி என்னுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பிரதமர் மோடி மற்றும் பாஜக மேலிடம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளேன். இந்த முடிவுகளுக்கு நான் முட்டுகட்டையாக இருக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
பாஜகவைப் பொறுத்தவரையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி தர தயாராக உள்ளது. ஆனால் ஷிண்டே இதனை ஏற்க மறுக்கிறார். இதனால் ஏக்நாத் ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவியும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கலாம் என்பதும் பாஜகவின் திட்டம். டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
இதனிடையே நவம்பர் 30 அல்லது டிசம்பர் 1-ந் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல்வர் பதவிக்கு போட்டியிடாத அஜித் பவார், தமக்கும் தமது கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் முக்கியமான துறைகள் எளிதாக கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications