சிறை செல்ல தயார்.. லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சீண்டி மஹூவா மொய்த்ரா எம்பி ஆக்ரோஷம்.. பரபரப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
டெல்லி: இந்திய ஜனநாயகம் குறித்த ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளும் இடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது. தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்படுவதால் இன்று 4வது நாளாக இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில் தான் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. இதற்கு முன்னோடியாக சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளார் என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை குறிப்பிட்டு கடுமையாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா எம்பி தாக்கிய நிலையில் இந்த கருத்துக்காக சிறை செல்லவும் தயார் என தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்நிலையில் தான் நாடளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என 2 சபைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
குறிப்பாக ஆளும் பாஜகவின் மத்திய அமைச்சர்கள், எம்பிக்களுக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்களுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இதனால் எழும் கூச்சல் குழப்பத்தால் சபை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.

தொடர்ந்து முடங்கும் சபைகள்
அதாவது காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாவதாக லண்டனில் பேசினார். இதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என பாஜகவினர் கூறும் நிலையில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதுஒருபுறம் இருக்க அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறும்போது பாஜகவினர் விமர்சனம் செய்கின்றன. இந்த 2 காரணங்களால் தான் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகிறது.

இன்றும் சபை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற 2வது அமர்வின் 4வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே மக்களவை, மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இரு சபைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மஹூவா மொய்த்ரா எம்பி
இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ரா மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மீது கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் இந்த குற்றச்சாட்டுக்காக சிறை செல்லவும் தயாராக உள்ளதாக அவர் ஆக்ரோஷமாக ஓம்பிர்லாவின் பெயரை டேக் செய்து விமர்சனம் செய்துள்ளார்.

ஓம்பிர்லா மீது அட்டாக்
இதுபற்றி மஹூவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தி்ல, ‛‛கடந்த 3 நாட்களாக சபாநாயகர் ஓம்பிர்லா பாஜக அமைச்சர்களை மட்டுமே மைக்கில் பேச அனுமதித்து சபையை ஒத்திவைக்கிறார். எதிர்க்கட்சியின் ஒரு உறுப்பினர்களை கூட பேச அனுமதிக்கவில்லை. ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு முன்னோடியாக சபாநாயகர் உள்ளார். இந்த ட்விட்டர் பதிவுக்காக நான் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்'' என்றார். இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications