வந்தே பாரத் விடுறாங்க, ரயில்வே ஸ்டேஷனில் வசதி இல்லை.. மின்சாரம் தாக்கி பலியான பெண்ணின் தந்தை குமுறல்
டெல்லி: உயர்தர வந்தே பாரத் ரயிலில் அரசு கவனம் செலுத்துவதாகவும் ஆனால், ரயில் நிலையங்களில் உரிய உள்கட்டமைப்புகள் செய்யப்படவில்லை என்றும் டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தாக்கி பலியான பெண்ணின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு டெல்லியில் உள்ள பரீத் விஹார் பகுதியில் வசித்து வரும் ஷாக்சி அகுஜா. அகுஜா கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி ரயில் நிலையம் வருகை தந்தார். அவருடன் இரண்டு பெண்கள் மற்றும் 3 குழந்தைகளும் வந்து இருந்தனர். டெல்லியில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெய்த கனமழை காரணமாக அன்று பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது.

ரயில் நிலையத்திலும் தண்ணீர் தேங்கி கிடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தேங்கி கிடந்த தண்ணீரில் மிதிக்காமல் இருப்பதற்காக ஷாக்ஷி அகுஜா அதன் அருகில் இருந்த மின் கம்பத்தை பிடித்துள்ளர். இதில் ஷாக்ஷி அகுஜா மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவருடன் வந்த சகோதரி மாதவி சோப்தா என்பவரும் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார். உடனடியாக அங்கு இருந்த பயணிகள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
எனினும், ஷாக்ஷி அகுஜா ஆம்புலன்சில் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மாத்வி சோப்டா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இளம்பெண் தொட்ட அந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில் வயர் ஒன்று வெளியே தொங்கிக் கொண்டு இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில், டெல்லி ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி பலியான பெண்ணின் தந்தை ரயில் நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனவும் ஆனால் வந்தே பாரத் ரயில்களில் அரசு கவனம் செலுத்துவதாகவும் சாடியுள்ளர். இது தொடர்பாக பலியான இளம்பெண்ணின் தந்தை கூறியதாவது:- ரயில் நிலையத்தில் முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை. எந்த ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. மருத்துவர்களோ.. போலீசாரோ.. இல்லை.
40 நிமிடங்கள் கழித்தே ரயில் நிலையத்தை விட்டு வெளியேற முடிந்தது. செல்லும் வழியில் மகள் இறந்து விட்டாள். உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எதுவும் தற்போது வரை எடுக்கவில்லை. நமது அமைப்புகள் எதுவும் மேம்படவில்லை. வந்தே பாரத் போன்ற உயர்தர ரயில்களை உருவாக்கி வருகிறோம். ஆனால், ரயில் நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியவில்லை" என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications