10 ஆண்டுகளில்.. 411 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தன்வசப்படுத்திய பாஜக! மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் பாஜக பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியை கவிழ்த்திருக்கிறது. 411 எம்எல்ஏக்களை இதுவரை தன்வசப்படுத்தியிருக்கிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
கடந்த ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2-ம் தேதி முதல் நடந்து வந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து, கடந்த 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். இதனை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் பேசிய அவர் காங்கிரஸ் இனி ஆட்சி அதிகாரத்திற்கே வர முடியாது என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார முறைகேடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கருப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், "நாட்டின் சுதந்திரத்தை காங்கிரஸ் உறுதி செய்தது. அதேபோல 2024ல், பாஜகவின் அநீதியின் இருளில் இருந்து காங்கிரஸ் நாட்டை மீட்கும். நமது நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்எல்ஏக்கள் பாஜகவால் தன்வசப்படுத்தப்பட்டனர். எத்தனையோ காங்கிரஸ் ஆட்சிகளை கவிழ்த்த பாஜகவினர் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவந்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் பேசும் பாஜகவினர், தங்கள் வெற்றியைப் பற்றி மட்டுமே கூறுகிறார்கள். தோல்விகளை தடம் தெரியாமல் மறைத்துவிடுகிறார்கள். எனவே நாங்கள் இந்த தோல்விகளை சுட்டிக்காட்டும்போது அது முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆகவேதான் மோடி அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை வெளியிடுகிறோம்.
2 கோடி வேலை வாய்ப்பு கொடுக்கிறோம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்கிறோம் என்பதும் மோடியின் உத்தரவாதமாக இருந்தது. ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே இப்போது புதிய உத்தரவாதங்களை வாரி வழங்குகிறார். மறுபுறம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற பாஜக அல்லாத மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது" என்றும் மத்திய அரசை விமர்சித்திருக்கிறார்.
நேற்று கர்நாடகா மாநிலத்தின் சார்பில், உரிய வரி பங்கீடு கேட்டு டெல்லியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications