12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதற்காகத்தானாம்.. - சொல்கிறார் மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி: மசோதாக்கள் எளிதில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவே 12 எம்.பி.க்களை அரசு வேண்டுமென்றே சஸ்பெண்ட் செய்தது என ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தொடக்கத்தில் சபை விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக 12 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்கட்சிகளில் கடும் அமளிக்கு இடையேயும் தேர்தல் சீர்திருத்த மசோதா உள்ளிட்ட பல சட்டங்கள் பாஜக தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சி தலைவர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மல்லிகார்ஜுன கார்கே புகார்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திட்டமிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மசோதாவை எளிதாக நிறைவேற்றுவதற்காக 12 எம்.பி.க்களை மத்திய அரசு வேண்டுமென்றே இடைநீக்கம் செய்துள்ளதாக ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புதன்கிழமை குற்றம் சாட்டினார். செய்தியாளர்களிடம் பேசிய திரு கார்கே, மசோதாக்கள் எளிதில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக 12 எம்.பி.க்களை அரசு வேண்டுமென்றே இடைநீக்கம் செய்தது என்றார்.

பாஜக விரும்பவில்லை
சபை சுமூகமாக நடைபெறுவதற்காக இடைநிறுத்தத்தை திரும்பப் பெறுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாகவும், ஆனால் மத்திய பாஜக அரசு மறுத்துவிட்டதாகவும், இப்போது பாஜகவினர் எதிர்க்கட்சியைக் குற்றம் சாட்டுவதாகவும், மத்திய அரசை கடுமையாக சாடிய அவர் சபையின் செயல்பாட்டை தடுக்கும் முயற்சி வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும், சீனா, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகள் எழுப்பப்படுவதை பாஜகவினர் விரும்பவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

அரசு செவிசாய்க்கவில்லை
குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் என அவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு தன்னிடம் தெரிவித்ததாகக் கூறிய மல்லிகார்ஜுன கார்கே, மக்களின் பிரச்சினைகளை பேசவிடாமலும், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமலும் இருக்கும் அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்கட்சிகள் ஆலோசனை
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா, உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் பதவி நீக்கம், 12 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் ரத்து ஆகிய விவகாரங்கள் மேல்சபையில் தொடக்கத்தில் இருந்தே பிரச்சினையான நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும், அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இன்று குளிர்கால கூட்டத்தொடர் முடித்துக்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து எதிர்கட்சிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications