கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியால்.. மனம் மாறிய மம்தா.. நாடாளுமன்ற தேர்தலுக்கு புது வியூகம்!
டெல்லி: காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் அந்த கட்சியை ஆதரிப்போம். அதேநேரம் பலவீனமாக இருக்கும் இடங்களில் மாநில கட்சிகளை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும். மாநிலத்தில் என்னுடன் சண்டை போடுவது போல இருக்கக்கூடாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற அமோக வெற்றி, தேசிய அளவில் எதிர்க்கட்சி முகாமை சேர்ந்த தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு அணியை திரட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, அண்மையில் மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் எனக் கூறி எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி எந்த மாநிலங்களில் வலுவாக இருக்கிறதோ, அவர்கள் அங்கே போட்டியிட வேண்டும். நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். பிற கட்சிகளுக்கும் காங்கிரஸ் இதேபோன்ற ஆதரவை அளிக்க வேண்டும்.
கர்நாடகாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உங்களை ஆதரிப்பது போலவும், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் எங்களுக்கு எதிராகப் போவது போலவும் கொள்கை செல்ல முடியாது. எனவே, நீங்கள் ஏதாவது நல்லதை பெற விரும்பினால், சில இடங்களில் தியாகம் செய்ய வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் கட்சி வலுவாக உள்ளது. எனவே நாங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். எனினும், காங்கிரஸ் அங்கு போட்டியிடக்கூடாது என்று நான் கூறவில்லை. இருந்தாலும் அது பற்றி நாம் விவாதிக்கலாம். மேற்கு வங்காளத்தில் நாங்கள் போட்டியிட வேண்டும். டெல்லியில் ஆம் ஆத்மி போட்டியிடட்டும் . பீகாரில் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.
எனவே அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். அவர்களின் பார்முலாவை நான் முடிவு செய்ய முடியாது. தமிழ்நாட்டில் அவர்கள் ( திமுக, காங்கிரஸ்) கூட்டணியில் இருக்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து போட்டியிடலாம். ஜார்க்கண்டில் இப்படித்தான். அது அவர்கள் விருப்பம்" என்றார். கடந்த காலங்களில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்து வந்தார். மக்களவை தேர்தலில்காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சாத்தியமில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, மம்தா இப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாக புதிய வியூகத்தை தெரிவித்துள்ளார். மம்தாவின் பானர்ஜியின் இந்த வியூகத்திற்கு எத்தனை கட்சிகள் ஆதரவாக இருக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications