இந்தியா கூட்டணிக்குள் மம்தா - காங்கிரஸ் இடையே வார்த்தை போர்.. கூலாக ராகுல் காந்தி சொன்ன ஒற்றை பதில்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து மவுனம் கலைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2014, 2019 தேர்தலைபோல் இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளன. இதற்காக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் என 28 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன.

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு இந்தக் கட்சிகள் இணைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஒருங்கிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் 4 முறை நேரடியாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்தியா கூட்டணி: தற்போது ஒவ்வொரு மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு கூட ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நடந்தது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‛இந்தியா' கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டு கொடுக்க மம்தா பானர்ஜி விரும்பவில்லை. ஆனால் இரு கட்சிகளும் அதிக இடங்களை கேட்பதாக கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜி வெளியேறுகிறாரா?: இந்நிலையில் தான் நேற்று மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் அனைத்து மத நல்லிணக்க பேரணியை தொடங்கினார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ‛இந்தியா' கூட்டணியை பொறுத்தமட்டில் குறிப்பிட்ட மாநிலங்களை மாநில கட்சிகளிடம் விட்டு விட வேண்டும். காங்கிரஸ் கட்சி பிற மாநிலங்களில் 300 நாடாளுமன்ற தொகுதிகளில் கூட தனித்து போட்டியிடலாம்.
நான் அவர்களுக்கு உதவுவேன். மேலும் அவர்கள் அந்த இடங்களில் போட்டியிடும் தொகுதிகளில் நான் எனது வேட்பாளர்களை நிறுத்த மாட்டேன்" என்று பேசினார். மம்தா பானர்ஜியை மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் விமர்சித்து வருகிறார். இருவருக்கும் இடையே வார்த்தை யுத்தம் முற்றி வருகிறது. இதனால், இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேற ஆயத்தமாகி வருகிறாரா? என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது.
மவுனம் கலைத்த ராகுல்: இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்துள்ளார். ராகுல் காந்தி கூறுகையில், "மம்தா பானர்ஜி எனக்கு நெருக்கமானவர்தான். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை போய்க் கொண்டு இருக்கிறது. பேச்சுவார்த்தையின் முடிவு விரைவில் வெளியாகும். எனவே, இது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்.
எனினும், காங்கிரஸ் கட்சிக்கு மம்தா பானர்ஜி நெருக்கமானவர் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். சில நேரங்களில் காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒருவொருக்கொருவர் விமர்சித்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். ஆனால், காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான உறவை அவர்கள் பாதிக்க மாட்டார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications