லோக்சபா சபாநாயகர் தேர்தலில் போட்டி- "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ் மீது மமதா கட்சி கடும் அதிருப்தி!
டெல்லி: லோக்சபா சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிடுவார் என அறிவித்துள்ளதற்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒன்றான திரிணாமுல் காங்கிரஸ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. லோக்சபா சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ வேட்பாளர் யார் என்பது குறித்தோ காங்கிரஸ் கட்சி திரிணாமுல் காங்கிரஸுடன் ஆலோசனை நடத்தவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்து வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது என்பதும் திரிணாமுல் காங்கிரஸின் அதிருப்தி.
லோக்சபா சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. பொதுவாக லோக்சபா சபாநாயகர், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதுதான் மரபு. ஆனால் தற்போதைய பாஜக தலைமையிலான கூட்டணி அரசோ, எதிர்க்கட்சிகளுடன் நேற்று வரை கலந்து ஆலோசிக்கவில்லை.

லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் நேரம் முடிவடைவதற்கு முன்னதாக திடீரென எதிர்க்கட்சிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை மத்திய அரசு தரப்பு ஏற்கவில்லை. இதனால் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இதனையடுத்து லோக்சபா சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 8 முறை எம்பியான கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். "இந்தியா" கூட்டணி தலைவர்களுடன் சென்று கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் லோக்சபா சபாநாயகர் தேர்தல் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதனால் நாடு விடுதலை அடைந்த பின்னர் முதல் முறையாக லோக்சபா சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ வேட்பாளர் யார் என்பது குறித்தோ தங்களிடம் ஆலோசிக்கவே இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேலும் இது காங்கிரஸ் கட்சியின் தன்னிச்சையான முடிவு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications