ஸ்டாலின் தான் "இந்தியா" கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும்! நொடியும் யோசிக்காமல் மணிசங்கர் அய்யர் பதில்
டெல்லி: தேசியளவில் "இந்தியா" கூட்டணியை வழிநடத்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் தான் சரியான நபர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஸ்டாலினால் செய்ய முடியும் என்றும் ராகுல் காந்தியை இதன் மூலம் பிரதமராக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தவர் மணிசங்கர் அய்யர். இவர் சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்தார். அதில் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த சரியா நபர் ஸ்டாலின் என அவர் குறிப்பிட்டார். ஸ்டாலின் கொள்கை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவார் என்பதால், கோஷ அரசியலைத் தவிர்ப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின்
மேலும், ராகுல் காந்தி பிரதமராக வழிவிடும் மனப்பான்மை ஸ்டாலினுக்கு உள்ளதாகக் குறிப்பிட்ட மணிசங்கர் அய்யர், இதனால் ராகுலின் பிரதமர் கனவுக்கு ஸ்டாலின் தடையாக இருக்க மாட்டார் என்றும் அய்யர் கூறினார். மணிசங்கர் அய்யர் மேலும் கூறுகையில், "கடந்த ஓர் ஆண்டாகவே இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு அவசியமான எல்லா விஷயங்களையும் ஸ்டாலின் பேசியுள்ளார். ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு ஸ்டாலின் தடையாக இருக்க மாட்டார். அதுவே ஸ்டாலின் சிறந்த குணம்" என்றார்.
ராகுல் பிரதமராக முடியும்
ஸ்டாலினை முன்னாள் தமிழக முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான காமராஜருடன் மணிசங்கர் அய்யர் ஒப்பிட்டார். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு பிரதமர் பதவியை மறுத்து, கட்சி ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்த காமராஜரை போன்றே ஸ்டாலின் ஒரு கிங் மேக்கர் இருப்பார் என்று மணிசங்கர் அய்யர் மறைமுகமாகத் தெரிவித்தார். மணிசங்கர் அய்யர் மேலும் கூறுகையில், "இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க ஒருவர் முழு நேரத்தையும் செலவிட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
கேரளத் தேர்தல்
கேரளத் தேர்தல் தொடர்பாகப் பேசிய அவர், "ஒரு காங்கிரஸ்காரன் என்ற முறையில், அங்குக் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவே நான் விரும்புகிறேன். அதேநேரம் ஒரு காந்தியவாதியாக நான் உண்மையைச் சொல்கிறேன்.. பினராயி விஜயன் அரசு அங்குப் பல அற்புதமான சாதனைகளைப் படைத்துள்ளன. எனவே, அங்கு இடதுசாரி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.
கேரள வாக்காளர்கள் இந்தியாவிலேயே மிகவும் புத்திசாலிகளாகவும், சுதந்திரமாகச் சிந்திப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என நான் விரும்பினாலும், உண்மை பேச வேண்டிய காந்தியவாதியாகச் சொல்கிறேன் அங்கு இடதுசாரிகளுக்கே வாய்ப்பு அதிகம்" என்றார்.
காங்கிரஸ் விளக்கம்
கேரளத் தேர்தல் தொடர்பாக மணிசங்கர் அய்யரின் இந்தக் கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கிடையே மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். அது மணிசங்கர் அய்யரின் தனிப்பட்ட கருத்து என்றும் அவர் இப்போது தற்போது காங்கிரஸில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications