மணிப்பூரில் மார்ச் 8 முதல் நிலைமையே தலைகீழாகனும்..டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா அதிரடி ஆர்டர்!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் மார்ச் 8-ந் தேதி முதல் அனைத்து சாலைகளிலும் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டம் உறுதி செய்யப்படும்; பொதுமக்களுக்கு யார் இடையூறு ஏற்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மிகப் பெரும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடியை கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று (01.03.2025) உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் ஆளுநர், மத்திய உள்துறைச் செயலாளர், புலனாய்வு அமைப்பின் இயக்குநர், ராணுவ துணைத் தலைவர், கிழக்கு கட்டளையின் ராணுவத் தளபதி, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), அசாம் ரைபிள்ஸ் இயக்குநர் ஜெனரல், மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், மணிப்பூர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மணிப்பூரில் நீடித்த அமைதியை நிலைநாட்ட முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் 2025 மார்ச் 8 முதல் மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்களின் தடையற்ற நடமாட்டம் உறுதி செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
மணிப்பூரின் சர்வதேச எல்லையில் நியமிக்கப்பட்ட நுழைவு முனையங்களின் இருபுறமும் வேலி அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். மணிப்பூரை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த வலைப்பின்னலும் தகர்க்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications