மணிப்பூர் பெண்கள் பலாத்காரம்.. பெண் நீதிபதிகள் விசாரணை குழு அமைப்பு.. உச்ச நீதிமன்றம் விளாசல்
டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக பெண் நீதிபதிகள் குழுவை உருவாக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்னிலையில் நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் முன் பரேட் போல கொண்டு சென்று உள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற அவமானகரமான விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் வரலாறு முழுக்க பதிவாகும் அளவிற்கு மக்கள் மனதை பாதித்து உள்ளது. அதில், நடுரோட்டில் இருந்து பொட்டை காடு ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கே இந்த பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆண்கள் அங்கே இருக்க.. பல ஆண்கள் இரண்டு பெண்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற வழக்கு: இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்புகையில், அந்த சம்பவம் மே 4ம் தேதி நடந்தது. ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட தேதியே மே 18ம் தேதிதான். எஃப்ஐஆர் பதிவு செய்ய 14 நாட்கள் எடுத்தது ஏன்? மே 4ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
பாதிக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம். பதிவு செய்யப்பட்ட 6,000 எஃப்ஐஆர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மே 4ஆம் தேதி உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்த காவல்துறைக்கு என்ன தடையாக இருந்தது?", மத்திய அரசு இதில் எடுத்த நடவடிக்கை என்ன? இந்த விவகாரம் ராஜஸ்தானில் நடக்கிறது, மேற்கு வங்கத்தில் நடக்கிறது என்றெல்லாம் இங்கே சொல்லாதீர்கள்.
இந்த விவகாரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? மணிப்பூர் விவகாரத்தில் என்ன செய்தீர்கள்? இந்த விவகாரத்தில் சுமார் 6000 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சொன்னீர்கள். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனை? கொலை, தீ வைப்பு, வீடுகளை எரித்தல் போன்ற கடுமையான குற்றங்களில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? பெண்களுக்குஎதிரான குற்றங்கள், சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனை?
பெண்களுக்கு எதிரான தனி தனியான குற்றங்கள் எத்தனை என்று உங்களால் சொல்ல முடியுமா? இது மோசமான விஷயம். இது தனிப்பட்ட விஷயமாக தெரியவில்லை. இது போல எத்தனை விஷயங்கள் நடந்துள்ளன. 2 பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது போல பல சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் இதுவரை எத்தனை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது.
மோதல் உச்சம்: மணிப்பூரில் மெய்ட்டி பிரிவினருக்கும் குகி மலைவாழ் மக்களுக்கும் இடையில் நடந்த மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. அங்கே மெய்ட்டி பிரிவினருக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிராக குகி பிரிவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக குகி பிரிவினர் செய்த போராட்டம் தற்போது கலவரத்தில் முடிந்துள்ளது. அங்கே மெய்ட்டி பிரிவினர் பெரும்பாலும் ஓபிசி பிரிவில் உள்ளனர். இன்னும் சிலர் எஸ்சி பிரிவில் உள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு எஸ்டி அந்தஸ்து, இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த மார்ச் 27ம் தேதி, எஸ்டி பட்டியலில் மெய்ட்டி பிரிவை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க மணிப்பூர் மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோரிக்கையை முன் வைத்து மெய்ட்டி பிரிவை சேர்ந்த இடஒதுக்கீடு ஆர்வலர்கள் தாக்கல் செய்த பல மனுக்களை விசாரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இதை எதிர்த்து எஸ்டி பிரிவை சேர்ந்த பழங்குடி இன மக்களான குகி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதுதான் அங்கு கலவரத்திற்கு காரணமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications