இந்தியாவில் பயங்கர நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு இருக்கா? எதிர்கொள்ள தயாரா இருக்கிறதா..விரிவான விளக்கம்
டெல்லி: நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டால் நிலநடுக்கங்களின் போது பெருமளவு சேதத்தை தவிர்க்க முடியும். எனவே அதற்கேற்ற திட்டமிடலுடன் இந்தியா செயல்பட வேண்டும் என்பது நிபுணர்களின் வாதமாக இருக்கிறது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரமான காசியான்டெப் பகுதியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்தியாவில் ஏற்பட வாய்ப்பா?
இந்த நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பை துருக்கி எதிர்கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 5000 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதையும் அதிர வைத்துள்ளது. துருக்கி நிலநடுக்கத்தால் மக்கள் மத்தியில் நிலநடுக்கம் பற்றிய பேச்சுக்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், துருக்கியில் ஏற்பட்டது போல சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் இந்திய பகுதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பான பகுதியாக இல்லை
நிலநடுக்கம் குறித்து பார்த்தோமேயானால், இந்தியா பாதுகாப்பான பகுதியாக நிச்சயமாக இல்லை என்று ஆய்வறிக்கைகள் கூறும் பகீர் தகவலாக இருக்கிறது. அதாவது இந்திய தட்டுக்கள் ஆசியாவை நோக்கி தோராயமாக ஆண்டுக்கு 47 மி.மிட்டர் என்ற விகிதத்தில் திபெத்த்திய பீடபூமியின் உயரத்தை பேலன்ஸ் செய்த படி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இமயமலை மற்றும் அல்டின் தாக்ஹ், ஷான் மலைப்பகுதிகள் தனது இயல்பான நிலையை இழக்கக்கூடும்.

பொருட்சேதங்களை குறைக்க
அதேபோல், ஆசியா மற்றும் இந்திய பகுதிகளில் நிலையான அதேவேளையில் கணிக்க முடியாத தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இமயமலைப்பகுதிகளில் மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கடந்த ஆண்டு விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். அதேபோல், நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் உயிர் மற்றும் பொருட்சேதங்களை குறைப்பதற்கான வழிகளை நோக்கி முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக இருந்தது.

பிளேட்கள் கொடுக்கும் தொடர் அழுத்தம்
இது தொடர்பாக புவியியல் வல்லுனரான அஜய் பவுல் கூறுகையில், இந்தியன் மற்றும் யூரோசியன் பிளேட்களின் மோதலால் இமயமலை தோன்றியது. இந்திய பிளேட்கள் மீது யூரேசிய பிளேட்கள் கொடுக்கும் தொடர் அழுத்தத்தால் அவ்வப்போது நிலநடுக்கங்களாக வெளிப்பட்டு வருகிறது. இமயமலையின் கீழ்ப் பகுதியில் உள்ள ஆற்றல்கள் ஒன்று சேர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவது என்பது இயல்பான மற்றும் தொடர்ச்சியான ஒன்றாக உள்ளது. ஒட்டுமொத்த இமயமலை பிராந்தியமும் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடமாகவும் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் எப்போதும் உள்ள இடமாக இருக்கிறது.

4 மிகப்பெரிய நிலநடுக்கங்கள்
எனினும் அழுத்தப்பட்ட ஆற்றல் எப்போது வெளிப்படும் என்பது பற்றியோ... நிலநடுக்கங்கள் எப்போது ஏற்படும் என்பது குறித்தோ கணிக்க முடியாது. இது எப்போது ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்த தருணத்தில் கூட ஏற்படலாம்.. அல்லது அடுத்த மாதம் ஏன் 100 ஆண்டுகளுக்கு பிறகு கூட நடைபெறலாம். கடந்த 150 ஆண்டுகளில் இமயமலை பகுதிகளில் 4 மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியா தயராகி உள்ளதா?
ஷில்லாங்கில் கடந்த 1897 ஆம் ஆண்டிலும் கங்க்ராவில் 1905 ஆம் ஆண்டிலும் பீகார் - நேபாளத்தில் 1934 ஆம் ஆண்டிலும் அசாம் மாநிலத்தில் 1950 ஆம் ஆண்டிலும் மிகப்பெரிய நில அதிர்வுகள் உணரப்பட்டு இருக்கின்றன. இந்திய நிலப்பரப்பில் 59 சதவீதம் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான இடங்களாக வகைப்படுத்தியிருக்கின்றனர். இதனால், கடந்த கால பாடங்களில் இருந்தும் எதிர்வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளவும் இந்தியா தயராகி உள்ளதா? என்பது பில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

சேதத்தை தவிர்க்க முடியும்
ஏனெனில் நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டால் நிலநடுக்கங்களின் போது பெருமளவு சேதத்தை தவிர்க்க முடியும். எனவே அதற்கேற்ற திட்டமிடலுடன் இந்தியா செயல்பட வேண்டும் என்பது நிபுணர்களின் வாதமாக இருக்கிறது. தற்போது நிலநடுக்கத்தால் கடும் உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் எதிர்கொண்டு இருக்கும் துருக்கி கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்காததே இந்த நிலைக்கு காரணம் என்றும் ஆய்வாளர்கள் வைக்கும் ஒரு கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications