செந்தில் பாலாஜிக்கு ரத்த குழாயில் கால்சிய படிவு.. உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல்
டெல்லி: செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், செந்தில் பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சில பிர்ச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளதால், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நாளடைவில் கோமா நிலைக்கு செல்ல நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்ட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரில் விசாரணை நடைபெற்று வந்தது. அமலாக்கத் துறை அதிகாரிகள், அதிரடியாக சோதனை மேற்கொண்டு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.

செந்தில் பாலாஜிக்கு அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் நலம் தேறியதை அடுத்து, புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு 8 முறை தள்ளுபடி செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மனு: இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நவம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் செந்தில் பாலாஜி நவம்பர் 16ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், மூலைக்கு செல்லும் ரத்தக்குழாயிலும் அடைப்பு இருப்பது சமீபத்திய மருத்துவ சோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 22 மீண்டும் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 11 ஆவது முறையாக நீட்டித்து, டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதற்கிடையே செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு செய்துள்ளார்.
அறிக்கை தாக்கல்: இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- ரத்த பரிசோதனை, எக்கோ பரிசோதனை, வயிற்று வலிக்கான சோதனை, கழுத்து வலி, முதுகெலும்பு, எம்ஆர்ஐ, எம்ஆர்ஏ, எம்ஆர்சிபி சோதனை செய்யப்பட்டது.
பித்தப்பை கற்கள்: முழு முதுகெலும்புகளிலும் அசாதாரண நிலை கண்டறியப்பட்டது. முதுகெலும்பில் வீக்கம் காணப்படுகிறது. MRCP சோதனையில் பல பித்தப்பை பாலிப்கள், பித்தப்பை கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பல்வேறு உடல் உபாதைகளால் செந்தில் பாலாஜி அவதிப்பட்டு வருகிறார். இது நாளடவைவில் உணவு உட்கொள்வதை குறைக்கும் அதனால் உடல் நிலை பாதிக்கப்படும்.
மூச்சுத்திணறல்: சிறைவாசத்தில் இருப்பதால் மனுதாரரின் உடல் நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். உரிய மருந்துகலை முறையாக எடுக்கவில்லை என்றால் மூச்சுத்திணறால் சிறுநீரக செயலிழப்பு, கணைய சுழற்சி, இரத்த கசிவு உள்ளிட்டவை ஏற்படும். செந்தில் பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சில பிர்ச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளது.
கோமா நிலைக்கு: அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நாளடைவில் கோமா நிலைக்கு செல்ல நேரிடும். இதயத்திற்கு செல்லும் இரத்த நாளத்தில் கால்சிய படிவு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இரத்த கொதிப்பு அதிகப்படுத்தி இதயம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது வரும் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைகு வர உள்ளது.












Click it and Unblock the Notifications