இந்திய ராணுவத்திற்கு நிதி வேண்டும்.. வாட்ஸ்அப்பில் பரவும் மெசேஜ் - மத்திய அரசு கொடுத்த விளக்கம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர், பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, பாகிஸ்தானிடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாஸ்ட் அப் தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் புல்மேடு பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் அநியாயமாக கொல்லப்பட்டனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, இருநாட்டு எல்லைகள் மூடல், பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிந்து நதி நீரை நிறுத்தினால் அதனைப் போராகவே கருதுவோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராக பேசி வருவது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.
பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த இரண்டு நாள்களில் 272 பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் இந்திய எல்லையில் பாகிஸ்தானிய ராணுவம் நிறுத்தி வருகிறது. இதற்கிடையே, இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வருவதால் இந்திய ராணுவத்திற்கு நிதி தேவைப்படுகிறது. எனவே, ராணுவத்துக்கு தேவையான நிதியை அளித்து உதவுங்கள் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவத்துக்கு நிதி தேவைப்படுவதாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் போலியானவை என்றும், அதில் எவ்வித உண்மையத் தன்மையும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்த போலியான தகவலை நம்பி இந்திய ராணுவத்துக்காக உதவுவதாக எண்ணி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை இழக்க வேண்டாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications