இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்?
டெல்லி: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகள் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 21 சதவீதம் உயர்ந்து 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்த திடீர் உயர்வு உலக பொருளாதாரத்துக்கும், குறிப்பாக இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியதையடுத்து, அதற்கு பதிலடியாக ஈரான் முக்கிய கடல் போக்குவரத்து வழித்தடமான ஹேர்மூஸ் நீரிணை ஜலசந்தியை மூடியுள்ளது. இந்த கடல் பாதை உலகின் மிகவும் முக்கியமான எண்ணெய் கடத்தல் வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு செல்லும் எண்ணெயின் பெரிய பகுதி இந்த பாதை வழியாகவே கடத்தப்படுகிறது. இந்த கடல் பாதை மூடப்பட்டதால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர்
குறிப்பாக குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் குறைந்து, விலை வேகமாக உயர்ந்துள்ளது. மேலும் ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் சந்தையில் பதற்றத்தை அதிகரித்து எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன.
எண்ணெய் தட்டுப்பாடு
இன்றைய நிலவரப்படி உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் 115 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இது 92.69 டாலராக இருந்தது. 2022-க்கு பிறகு இவ்வளவு பெரிய அளவில் ஒரே நாளில் விலை உயர்ந்தது இதுவே முதல் முறையாகும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் உலக பங்குச் சந்தைகளிலும் தெரிகிறது. பல நாடுகளில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. போர் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை 150 டாலர் வரை உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு
இந்த நிலை இந்தியாவுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்துள்ளதுடன், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்துள்ளது. போர் சூழ்நிலை காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் வரும் நாட்களில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. எரிசக்தி துறையில் இது பெரிய சவாலாக மாறக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பிலும் பாதிப்பு ஏற்படலாம். தற்போது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 92.33 ஆகக் குறைந்துள்ளது. இது பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயத்தையும் உருவாக்கும்.
கச்சா எண்ணெய்
இந்தியாவைப் பொருத்தவரை கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. குறிப்பாக 60 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணெய் வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. மொத்தத்தில் இந்தியா பயன்படுத்தும் கச்சா எண்ணெயில் சுமார் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா உள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர்
இந்த சூழ்நிலையில் மாற்று வழிகளை இந்தியா தேட தொடங்கியுள்ளது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று அமெரிக்கா பல நாடுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் தற்போதைய உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு மட்டும் இந்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியாவுக்கு தற்காலிக நிவாரணமாக பார்க்கப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப்
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்கும்போது, உலக அமைதி மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புக்காக சில விலைகளை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதில் தவறு இல்லை என்று கூறியுள்ளார். மொத்தத்தில் பார்க்கும்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் சூழ்நிலை தான் தற்போதைய எண்ணெய் விலை உயர்வின் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
எண்ணெய் உற்பத்தி
இந்த போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே உலகளாவிய எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் சீராகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்தியாவில் உடனடியாக பெரிய அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. போரின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications