“பிரதமர் சொல்லிதான் ஆர்மி அங்கே போனாங்க”.. சீனா மோதல் விவகாரத்தில்.. அமைச்சர் ஜெய்சங்கர் சுளீர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லை விவகாரத்தில் மத்திய அரசு தூங்கிக் கொண்டிருந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், பிரதமர் மோடி உத்தரவின் பெயரில்தான் ராணுவம் சர்ச்சைக்குரிய பகுதிக்கு சென்றதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக எல்லையில், சீன படையினர் தொடர்ந்து அத்துமீறி வருவதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை தவிர்ப்பதற்கு இதற்கு முன்னர் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டாலும் கூட மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் டிசம்பர் 9ம் தேதியன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன வீரர்கள் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். இதனை இந்திய வீரர்கள் முறியடித்துள்ளனர்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இது போன்ற மோதலில் சீனா வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் இது குறித்து மத்திய அரசு எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதத்தை எழுப்பின. இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த ராகுல்காந்தி, "லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா முழு வீச்சில் போருக்கு தயாராகி வருகிறது. ஆனால் இந்த அச்சுறுத்தலை மத்திய அரசு புறக்கணித்துவருகிறது. மத்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது" என்று விமர்சித்திருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கேள்வி

கேள்வி

பாஜக தலைவர்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, "கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி கிழக்கு லடாக்கில் இந்திய எல்லையில் சீனா ஊடுருவவில்லை என்று ஏன் சொன்னீர்கள்? இந்த பகுதியில் ஏன் சீன வீரர்களை அணுமதித்தீர்கள்? ராணுவ வீரர்கள் மலையை முற்றுகையிடும் திட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள்?" என இப்படி 7 கேள்விகளை மத்திய அரசை நோக்கி முன்வைத்திருந்தார். மறுபுறம் சீன அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தன.

விளக்கம்

விளக்கம்

இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "உண்மையான கட்டுப்பாட்டு பகுதியை (LAC) ஆக்கிரமிக்க இந்திய ராணுவம் ஒருபோதும் சம்மதிக்காது. அதேபோல ராகுல் காந்தி சொன்னதால்தான் நம்முடைய ராணுவ வீரர்கள் எல்லைக்கு செல்கிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். இது உண்மையில்லை. பிரதமர் மோடி சொன்னதால்தான் நம்முடைய வீரர்கள் அங்கு சென்றுள்ளனர்" என்று விளக்கமளித்துள்ளார். என்னதான் மத்திய அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டாலும், சீனா எனும் வார்த்தையை பிரதமர் எங்கும் பயன்படுத்தவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு முன்னர் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பாஜகவினரே வெளிப்படையாக விமர்சித்தனர்.

சுப்பிரமணிய சுவாமி

சுப்பிரமணிய சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இது குறித்து கூறுகையில், "பிரதமர் மோடிக்கு இந்திய நிலப்பரப்பின் மீது அன்பு இருக்கிறதா? அப்படி இருந்திருந்தால் இந்த ஆக்கிரமிப்பு குறித்து மன்னிப்பு கேட்டிருக்கலாம். சீனாவை கண்டு அவர் அஞ்சுகிறார் எனில், பாரதமாதாவின் நிலத்தை அவரால் எப்போது மீட்க முடியும்?" என்று கேள்வியெழுப்பினார். மேலும், "சீனாவிலிருந்து பொருட்கள் அமோகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக டாலரில் கூட பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று இந்தியா-சீனா வர்த்தகம் குறித்தும் விமர்சித்திருந்தார்.

வர்த்தகம்

வர்த்தகம்

இந்தியாவை பொறுத்த அளவில், 2020-2021ம் ஆண்டு சீனாவுடன் இந்தியா 86.39 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கிறது. இது 2021-2022ம் ஆண்டில் 100 பில்லியன் டாலரை கடந்து 115.83 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 34.06 சதவிகிதம் அதிகமாகும். கடந்த பத்தாண்டுகளுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் தற்போது அந்நாட்டுடன் இந்தியாவின் வர்த்தகம் 35.82 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நடப்பாண்டை பொருத்த அளவில் முதல் 7 மாதங்களில் அதாவது ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சீனாவுடன் 69.114 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியா வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கிறது. 2021-2022ம் ஆண்டில் இந்தியா அண்டை நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தகத்தில் 11.19 சதவிகிதம் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா, சீனாவுடன்தான் அதிக அளவு வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கிறது. இதனால்தான் சீனாவை இந்தியா வெளிப்படையாக விமர்சிக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+