Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஃபார்ம் 17C டேட்டா வெளியிடுவதில் என்ன பிரச்சனை?” தேர்தல் ஆணையத்தை சாடி பாயிண்ட்ஸை அடுக்கிய பிடிஆர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்குப்பதிவு விவரங்களை முறையாக வெளியிடக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்துக்கு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) கடந்த 10ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், நடைபெற்று வரும் மக்களவை பொதுத்தேர்தலில் மூன்று கட்ட வாக்கு பதிவுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் வாக்குப்பதிவுக்கான முழு விவரங்களை மிகவும் தாமதமாகவே இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதிலும் ஏராளமான குளறுபடிகள் இருக்கிறது.

Minister PTR Palanivel Thiagarajan request to Supreme Court hearing the ADR case

வாக்குப்பதிவு விவரம் தொடர்பாக வழக்கு: தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு நடந்த நாளன்று வௌியிட்ட எண்ணிக்கை விவரங்களுக்கும், இறுதியாக வெளியிட்ட விவரங்களுக்கும் இடையில் 5 அல்லது 6 சதவீதம் அளவுக்கு வேறுபாடு உள்ளது. இது பொதுமக்களிடம் நிறைய சந்தேகங்களை எழுப்பி உள்ளது. குறிப்பாக தேர்தல் நேர்மையாக நடக்கிறதா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே வாக்குப்பதிவு விவரங்களை உடனடியாகவும், துல்லியமாகவும் வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "தேர்தல் அதிகாரியிடம் இருந்து படிவம் 17சி-ல் இருந்து புள்ளி விவரங்களை பெற்று வெளியிடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை என்பதே எங்களது தரப்பு குற்றச்சாட்டு என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி: அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஒரே இரவில் விவரங்களை வாங்கி வெளியிடுவதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது. மாலை 6 அல்லது 7 மணிக்குள் வாக்குப்பதிவு முடிந்து விடுகிறது. இதையடுத்து அதிகாரிகளிடம் இருந்து தரவுகளை வாங்கி நீங்கள் பதிவேற்றம் செய்யலாமே. உங்களுக்கு போதுமான கால அவகாசம் உள்ளதே" என்று தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் சர்மா, "தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக முதல் வாக்காளர் பட்டியல் சரியான ஒன்றாகதான் இருந்தது. ஆனால் புதிய வாக்காளர்கள் மற்றும் அவர்களின் எண்ணிக்கையில் பெரும் தாக்கம் தான் இப்போது பிரச்சனையை உருவாக்குகிறது. இருப்பினும் தரவுகள் அனைத்தும் துல்லியமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. டேட்டாவை ஒழுங்கு செய்ய ஒரு செயலி உள்ளது. அது தொடர்ந்து விவரங்களை புதுப்பித்து கொண்டே இருக்கிறது. அதனால் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அது சரி செய்யப்படும்" என்றார்.

ஃபார்ம் 17சி: தொடர்ந்து தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த விவகாரத்தில் 17சி ஃபார்ம் அடிப்படையில் வாக்கு சதவீதத்தை வெளியிடுகிறீர்களா? 66 சதவீத வாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் தெரிவிப்பது 17சி தரவுகளின் அடிப்படையில் தானே? அதில் ஏதேனும் தேர்தல் ஆணையத்துக்கு பிரச்னை உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர் "அதில் எங்களுக்கு எந்தவித சிரமங்களும் கிடையாது. இருப்பினும் அதில் கொஞ்சம் நேரம் எடுக்கும். தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி என்பது ஒரு பொய்யான குற்றச்சாட்டு." என்று தெரிவித்தார்.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவீதம் தொடர்பான வாக்குப்பதிவு விவரங்களை விரைவாக வெளியிடக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.

அமைச்சர் பிடிஆர்: இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "ஃபார்ம் 17 டேட்டா ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளாலும் (543 கலெக்டர்கள்/ மாஜிஸ்திரேட்கள்) ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆதரவுடன் அட்டவணைப்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே தரவு வைத்திருந்தால் அதை ஏன் வெளியிடக்கூடாது? முன்பு இப்படித்தான் வெளியிட்டார்கள். இப்போது அதனை மறைப்பதால் யாருக்கு லாபம்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிடிஆர் முன்வைத்த பாயிண்டுகள்: மேலும், தேர்தல் ஆணையம், விரைவாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடக் கோரி ADR தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் இந்திய உச்ச நீதிமன்ற அமர்வுக்கு சில முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

1) பெரும்பாலான வேட்பாளர்கள் (குறிப்பாக சிறிய அல்லது தொழில்நுட்ப வசதி அற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள்) ஃபார்ம் 17 டேட்டா - மின்னணு வாக்குப்பதிவு வரிசை எண், மொத்த வாக்குகளை சேகரிக்கவும், தொகுக்கவும், அட்டவணைப்படுத்தவும் திறனைக் கொண்டிருக்க மாட்டார்கள். வாக்கு எண்ணும் செயல்முறைக்கு முன்னதாக, ஒரு எம்.பி தொகுதிக்கு 1,500 முதல் 2,000 வரையிலான வாக்குச்சாவடிகள் உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும்.

2) எனவே, வாக்குப்பதிவுக்குப் பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, இந்த விவரங்களுடன் கூடிய ஃபார்ம் 17 தரவு வெளியிடப்பட்டால், முழு வாக்கு எண்ணும் செயல்முறையும் மிகவும் வலுவானதாகவும், வெளிப்படையாகவும் இருக்கும். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரிசை எண் வாரியாக ஒவ்வொரு EVM-லும் சரியாக எத்தனை வாக்குகள் எண்ணப்பட வேண்டி உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். குறிப்பாக சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

3) இந்த டேட்டாவை வாக்குச்சாவடி மூலமாக வெளியிடுவது 2019 வரை தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாக இருந்தது. அவர்கள் இந்தத் தரவை வெளியிடுவதை மர்மமான முறையில் நிறுத்திவிட்டு, பழைய ஃபார்ம் 17 டேட்டா அனைத்தையும் தங்கள் இணையதளத்தில் இருந்து எடுத்துவிட்டனர். இந்த நடவடிக்கைக்கு என்ன நோக்கம் அல்லது நியாயம் இருக்க முடியும்?

4) தேர்தல் ஆணையம் நேரடியாக ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரியாலும் சமர்ப்பிக்கப்படும் டேட்டாவை வெளியிடுவதை விட இப்போது செய்யும் நடைமுறை எந்த அளவுக்கு ஜனநாயகத்திற்கு சிறப்பாக இருந்துவிடும்?

5) 543 பக்கங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட தரவை - ஏற்கனவே தொகுக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் அவர்களுக்கு அனுப்பப்பட்டவற்றை தேர்தல் ஆணையம் அவர்களின் இணையதளத்தில் வெளியிடாததற்கு என்ன நியாயமான காரணம் இருக்க முடியும்?

6) ஜனநாயகம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் அடிப்படை ஆர்வமுள்ள எவரும், ஓட்டு எண்ணிக்கைக்கு முன் சரியான வாக்குப்பதிவு டேட்டாவை வெளியிட வலியுறுத்த வேண்டும்.

தேர்தல் செயல்பாட்டில் பொறுப்புமிக்க தன்மை, உறுதிப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் சில அம்சங்களைப் பாதுகாக்க உங்கள் அரசியலமைப்பு கடமையைச் செய்யுங்கள்" என உச்ச நீதிமன்ற அமர்வை கேட்டுக்கொண்டுள்ளார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+