உண்மையான பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இல்லாத விவகாரங்களை பூதாகரமாக்கும் மோடி: ராகுல் காட்டம்
டெல்லி: லோக்சபா தேர்தல்களில் முன்வைக்கப்படுகிற உண்மையான பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள இல்லாத விவகாரங்களை பிரதமர் மோடி பூதாகரமாக்குகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொடர்பான சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் காங்கிரஸ் கட்சியோ கடந்த தேர்தலில் மோடி அளித்த ரூ15 லட்சம், வேலை வாய்ப்புகள் குறித்து கேள்விகள் எழுப்புகின்றன.
தொடர்ந்தும் பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்கிறார். இது சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு ராகுல் காந்தி ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்திருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

பொய் பேசும் மோடி
ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி பயன்படுத்தினார் என்பது பொய். நாங்கள் நாட்டின் எதிர்காலத்துக்காகப் போராடி வருகிறோம். வேலை வாய்ப்புகள் குறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மோடி பதில் அளிக்கவில்லை.

கேள்விக்கு என்ன பதில்?
ரூ15 லட்சத்தை வங்கிக் கணக்கில் போடுவதாக அளித்த வாக்குறுதி என்னாயிற்று? என்ற கேள்விக்கு பதில் இல்லை. ரபேல் விவகாரம் குறித்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. இத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்டு கடந்த காலங்களை நோக்கி ஓடுகிறார் மோடி. இப்படி கடந்த காலங்களை மோடி தொடர்ந்து பேசினால் விரைவில் நாங்கள் கண்டுகொள்ளாமல் போய்விடுவோம்.

தப்பிக்க நினைக்கும் மோடி
விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்களின் உரிமைகளைத்தான் நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்திருக்கிறோம். மக்களின் பிடியில் இருந்து மோடி தப்பிக்க முடியாது என்பதால்தான் அவர் கடந்த காலங்களைப் பற்றியே பேசுகிறார்.

விராத் கப்பல் விவகாரம்
ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலில் என்னுடைய தந்தையுடன் நான் இருந்தேன். அப்போது அவர் பிரதமர். அந்த படங்கள்தான் அவை. அவர் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்ட போது நானும் இருந்திருக்கிறேன். அது அதிகாரப்பூர்வமான பயணம்தான். அது எப்படி போர்க்கப்பலில் விடுமுறையை கொண்டாட முடியும்? போர் விமானத்தில் விடுமுறையை கொண்டாட முடியுமா? அது என்ன பயணிகள் கப்பலா?

அன்று நடந்தது எனக்கு எப்படி தெரியும்?
ஐ.என்.எஸ். விராத் கப்பல் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்தது எங்களது பாதுகாப்புக்காகவா? இல்லையா? என்பதை கடற்படையிடம்தான் கெட்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கு முன்னர் எதற்காக அந்த கப்பல் அங்கே நின்றது என்பது எனக்கு எப்படி தெரியும்? அதாவது மக்கள் முன்வைக்கிற உண்மையான பிரச்சனைகளில் இருந்து தப்பி இல்லாத விஷயங்களை பூதாகரமாக்குகிறார் பிரதமர் மோடி. ஊடகங்களும் அதையே பிடித்துக் கொள்கின்றன.

மோடியை அனுமதிக்க முடியாது
நாங்கள் மக்கள் எதிர்நோக்கும் எதிர்கால பிரச்சனைகளை முன்வைக்கிறோம். எங்களது சிந்தனை எதிர்காலம் குறித்தது. இப்படி பழைய விஷயங்களையே பேசி தப்பிவிடலாம் என மோடி நினைத்தால் அதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அந்த பேட்டியில் ராகுல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications