குஜராத் படுகொலை- மோடி ஆவண படம்: பிபிசி-க்கு தடை கோரிய இந்து சேனா மனு உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்!
பிபிசிக்கு இந்தியாவில் தடை கோரிய இந்து சேனா மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
டெல்லி: 2002-ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை மற்றும் பிரதமர் மோடி தொடர்புடைய ஆவணப்பட விவகாரத்தில் சர்வதேச ஊடகமான பிபிசி-க்கு தடை விதிக்க கோரிய இந்து சேனா அமைப்பின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் ரயில் பெட்டிகள் எரிந்து சாம்பலாகின. இதில் சாதுக்கள் பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் மத மோதல்கள் வெடித்தன. உலகையே அதிரவைத்த இந்த மத மோதல்களில் 1,000க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

குஜராத் மதமோதல்களின் போது மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் மத மோதல்கள் தொடர்பாக முதல்வராக இருந்த மோடி மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றன. ஆனால் முதல்வராக இருந்த மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து முதல்வராக இருந்த மோடி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சர்வதேச ஊடகமான பிபிசி, குஜராத் 2002-ம் ஆண்டு குஜராத் இனப் படுகொலை தொடர்பான ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படம் பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து பிபிசி ஆவணப்படத்தை மத்திய பாஜக அரசு முடக்கியது. ஆனால் நாட்டின் பல பகுதிகளில் மத்திய அரசின் இந்த தடையை மீறி எதிர்க்கட்சிகள் மோடி தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டன.
மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அத்துடன் சர்வதேச ஊடகமான பிபிசியின் செயல்பாடுகளுக்கே இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்று இந்து சேனா என்ற அமைப்பின் தலைவரான விஷ்ணுகுப்தா உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவின் பொருளாதாரமே வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான லாபிகள் துணையுடன் பிபிசி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 1970-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆவணப்படம் வெளியிட்டதற்காக பிபிசியின் நடவடிக்கைகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் 2 ஆண்டுகளுக்கு தடைவிதித்திருந்தார். அதனைப் பின்பற்றி இப்போதும் இந்தியாவில் பிபிசியின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்து சேனா தலைவர் விஷ்ண்குப்தாவின் இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது.












Click it and Unblock the Notifications