மோடி மேஜிக்.. ஹரியானா முதல் மேற்கு வங்கம் வரை 9 மாநிலங்களில் பாஜக முதல் முறையாக ஆட்சி
டெல்லி: நரேந்திர மோடி பிரதமரான பிறகு ஹரியானா, மகாராஷ்டிரா, அசாம், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்பட 9 மாநிலங்களில் பாஜக முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜனதா தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா இதுபற்றி கூறும் போது, இன்று 21-22 மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 78 சதவீதத்தை பா.ஜனதா கூட்டணி ஆட்சி ஆள்கிறது. நிலப்பரப்பில் 72 சதவீதத்தை ஆள்கிறது" என்று தெரிவித்தார்.
நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியது. ஹரியானாவில் தான் மோடி வந்த பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காவி கொடியின் கீழ் ஹரியானா வந்தது. பாஜகவின் முதல்வராக மனோகர்லால் கட்டார் பதவியேற்றார. அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவானது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆனார்.

2016-ம் ஆண்டுக்கு பின்னர் படிப்படியாக, வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கால் பதிக்கத் தொடங்கியது. 2016ம் ஆண்டு, அசாம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, சர்பானந்தா சோனோவால் (காங்கிரஸில் இருந்தவர்) தலைமையில் முதலாவது பாஜக ஆட்சி பதவி ஏற்றது. அப்போதிருந்து ஆட்சியை தக்கவைத்து வருகிறது.
அதே ஆண்டில், மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாசலப்பிரதேசத்திலும் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைந்தது. காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி பெமா காண்டு, 33 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்து பாஜக ஆட்சியை அமைத்தார். அதேபோல் 2017-ம் ஆண்டு, மணிப்பூரில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. 2018-ம் ஆண்டு, திரிபுராவில், பிப்லப் குமார் தேவ் தலைமையில் பாஜக ஆட்சி பதவியேற்றது. திரிபுராவை பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக பலஆண்டுகள் இருந்தது.
அதேபோல் பல ஆண்டுகளாக வீழ்த்தவே முடியாத நபராக ஒடிசாவில் பிஜூ பட்நாயக் இருந்தார். ஆனால் 2024-ம் ஆண்டு, ஒடிசா சட்டமன்ற தேர்தலில் 24 ஆண்டுகால பிஜு ஜனதாதள ஆட்சியை வீழ்த்தி, பாஜக ஆட்சி அமைந்தது. பீகாரில், கூட்டணி ஆட்சியில் பாஜக இருந்து வந்தது. கடந்த மாதம் நிதிஷ்குமார் எம்பியாக பதவியேற்றதால், முதல் முறையாக பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தது. தற்போது 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த மம்தாவை அகற்றிவிட்டு, மேற்கு வங்காளத்தில், முதல்முறையாக பாஜக அரசு பதவியேற்றுள்ளது.
இதுபற்றி பா.ஜனதா தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா கூறும் போது, 'இன்று 21-22 மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 78 சதவீதத்தை பாஜக கூட்டணி ஆட்சி ஆள்கிறது. நிலப்பரப்பில் 72 சதவீதத்தை ஆள்கிறது" என்றார்.
பா.ஜனதா தேசிய செய்தித் தொடர்பாளர் துஹின் ஏ.சின்ஹா கூறும் போது, "தமிழ்நாடு, கேரளா ஆகிய 2 தென்மாநிலங்களைத் தவிர, நாடு முழுவதும் பாஜக வலிமையான இடத்தில் உள்ளது. அந்த 2 மாநிலங்களும் கட்சியின் வருங்கால விஸ்தரிப்பு திட்டத்தில் இருக்கிறது.. இங்கும் வளருவோம்" என்றார்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் , பாஜக மாநிலங்களில் ஆட்சியமைக்க மத்தியில் அதிகாரம் பெற்றது முக்கிய காரணம் ஆகும். அதே போல் ஒரு மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்காக இருக்கிறதோ,அந்த கட்சியில் செல்வாக்கான நபர்களை தன் பக்கம் இழுத்தே பாஜக ஆட்சியமைத்தது. காங்கிரஸ், திரிணாமுல், கம்யூனிஸ்ட் என எங்கு எந்த கட்சி பலமாக இருக்கிறதோ, அவர்களை தன் பக்கம் இழுத்தே ஆட்சியமைத்து வருகிறது.














Click it and Unblock the Notifications