அச்சமூட்டும் குரங்கு அம்மை..! அசால்ட்டா இருக்கக் கூடாது மக்களே..! அறிகுறிகள் இப்படித்தான் இருக்கும்!
டெல்லி : பல்வேறு உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி அச்சத்தை அதிகரித்து வரும் நிலையில், குரங்கு அம்மை நோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.
தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போன்ற ஒரு சுகாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

குரங்கு அம்மை பாதிப்பு
இந்நிலையில், குரங்கு அம்மை நோய் வெளிநாடுகளில் பரவி வருவதை அடுத்து மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை கண்டறியப்படவில்லை. நோய் தொற்று கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள்
ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டால் அது மேலும் பரவாமல் இருக்க அவரை தனிமைப்படுத்தப்பட வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
Recommended Video

அறிகுறிகள் என்னென்ன?
கண் எரிச்சல், கண் வலி, பார்வை மங்கு வது, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி உள்ளிட்டவைகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கான பொது அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, தசைவலி, அதிக அளவு சோர்வு, இருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவை உள்ளது. யாராவது ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டால் மாநில கண்காணிப்பு மற்றும் மத்திய கண்காணிப்பு மையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு அறிவிப்பு
மாநில அளவில் அரசுகள் கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப் பட்டாலும் அது எப்படி பரவியது, நோயால் பாதிக்கப்பட்டவர் எங்கிருந்து வந்தார் என்ற தகவலை உடனடியாக சேகரிக்க வேண்டும். மாநில மற்றும் யூனியன் யூனியன் பிரதேச அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications