அக்னிபாத் போராட்டத்திற்கு இடையே.. முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடு பற்றி வெளியான ஷாக் தகவல்
டெல்லி: நாடு முழுவதும் அக்னிபாத் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை அரசுத் துறைகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாப்புத் துறையினர் வேலை செய்து வருகின்றனர். அப்படி நாட்டிற்காகத் தியாகம் செய்பவர்களுக்கு அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளன.
அதன்படி துணை ராணுவப் படைகள் தொடங்கி பல்வேறு அரசுத் துறைகளில் முன்னாள் ராணுவ வீரர்களுக்குச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது அக்னிபாத் வீரர்களுக்கும் இதேபோன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு துறைகள்
இதனிடையே முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசுத் துறையில் அளிக்கப்படும் வேலைகள் குறித்த ஷாக் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசின் பாதிக்கும் மேற்பட்ட துறைகள், முன்னாள் ராணுவ வீரர்களில் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடங்கள் உரிய முறையில் நிரப்பப்படாமல் இருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அலட்சியம்
மத்திய சிவில் சேவைகள், வங்கிகள், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றில் இருக்கும் இட ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்க கடந்த ஜூன் 2ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் 77 மத்திய அரசுத் துறைகள் இருக்கும் நிலையில், அதில் 48 துறைகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்வதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

முக்கிய கூட்டம்
இந்தளவு முக்கியமான கூட்டத்தில் வர்த்தகம், விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வி, அணுசக்தி, சிவில் விமான போக்குவரத்து, கார்ப்பரேட் விவகாரங்கள், சாலை போக்குவரத்து, சட்டம் மற்றும் நீதி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதேபோல சுமார் 60% அரசுத் துறைகளில் எத்தனை சதவிகிதம் முன்னாள் ராணுவ வீரர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

தகவல் இல்லை
அணு ஆராய்ச்சி துறை, விவசாய துறை தொடங்கி மொத்தம் இருக்கும் 77 துறைகளில் 45 துறைகள் வேலைக்கு எடுத்துள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. அதாவது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அனைத்து அரசுத் துறைகளிலும் குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அதை பல துறைகள் முறையாகப் பின்பற்றவில்லை.

அக்னிபாத்
மத்திய பாதுகாப்புத் துறை இப்போது அக்னிபாத் என்ற புதியதொரு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் 4 ஆண்டுகளுக்கு பின்னர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இத்திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் பெரும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்தச் சூழலில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறித்த தகவல்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications