இங்கிலாந்திலிருந்தும் வந்த அழுத்தம்.. அன்னை தெரசா அறக்கட்டளை உரிமத்தை புதுப்பிக்க ஓகே சொன்ன மத்திய அரசு
டெல்லி: அன்னை தெரசாவின் அறக்கட்டளையின் உரிமம் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதன் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் இயங்கி வரும் அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க மத சபையான 'மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி' FCRA உரிமம் மீட்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் மீட்டெடுத்தது. "சில பாதகமான உள்ளீடுகள் கவனிக்கப்பட்டதால்" MoC இன் FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்று கடந்த டிசம்பரில் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் உரிமம் மீட்கப்பட்டிருக்கிறது என அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சபையின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நிதியைப் பெறவும் பயன்படுத்தவும் MoC தகுதியுடையதாக ஆகி உள்ளது.

முடக்கப்பட்ட கணக்கு
2021 டிசம்பர் இறுதி வாரத்தில், அன்னை தெரசாவின் 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி'யின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இதற்கு காரணம் மத்திய அரசு என மம்தா தெரிவித்தார். மத்திய அரசின் நடவடிக்கையால் 22000 அதிகமான நோயாளிகள் , மற்றும் ஊழியர்கள் உணவு, மருந்துகள் இல்லாமல் தவித்து வருவதாக முதல்வர் மம்தா தெரிவித்தார்.

வெளிநாட்டு நன்கொடை
அன்னை தெரசா அறக்கட்டளை வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. "வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் கீழ் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட உரிமம் கடந்த 2021 அக்டோபர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. இருந்தபோதிலும், அறக்கட்டளைகளின் பதிவுக் காலத்தை டிசம்பா் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

காரணம் என்ன
இதையடுத்து அன்னை தெரசா அறக்கட்டளை விண்ணப்பித்தது. இதனை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்தபோது, அதில் சில பாதகமான தகவல்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. எனவே, உரிய நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

அமைச்சகத்தின் விளக்கம்
அந்த அறக்கட்டளையின் பதிவு செல்லத்தக்க காலம் வரும் 31-ஆம் தேதி வரை உள்ளது என்பதால், அதன் வங்கிக் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை. மாறாக, அந்த அறக்கட்டளை கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக வங்கி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது' என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

உதவிய ஒடிசா
இந்நிலையில், ஒடிசா அரசு அன்னை தெரசா அறக்கட்டளைக்கு உதவியிருக்கிறது. ஒடிசாவில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 13 நிறுவனங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 78.76 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

யாரும் முடக்கவில்லை
''எங்கள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை. அந்நிய பணப் பரிவர்த்தனைக்கான சான்றிதழ் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை சரியாகும் வரை வங்கிக் கணக்கை நிறுத்தி வைக்குமாறு நாங்கள் தான் கேட்டுக் கொண்டோம்'' என அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எதிர்ப்பு
அன்னை தெரசா அறக்கட்டளையின் உரிமங்களைப் புதுப்பிக்காததற்காக இந்தியாவுடன் இங்கிலாந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் அமைப்பு அழைப்பு விடுத்தனர். "மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி மற்றும் பிற அரசு சாரா நிறுவனங்களுக்கான வெளிநாட்டு நிதியைத் தடுப்பது" பற்றி UK அரசாங்கம் டெல்லிக்கு என்ன பிரதிநிதித்துவத்தை அளிக்கிறது என்றும் இங்கிலாந்தில் பல அமைப்புகள் விவாதத்தை முன்னெடுத்தன. இந்தியா இந்த முடிவுகளை மாற்றியமைக்காவிட்டால், இந்தியாவின் இதனால் பலர் பாதிக்கப்படுவார்கள். மக்களுக்கு பயங்கரமான விளைவுகள் ஏற்படும் என்று இங்கிலாந்து தரப்பில் எடுத்துரைக்கபட்டது. இங்கிலாந்து அரசுக்கு பல அமைப்புகளிடமிருந்து அழுத்தம் தரப்பட்டது. இங்கிலாந்து அரசாங்கத்தின் விம்பிள்டன் தெற்காசிய அமைச்சர் அஹ்மத், லண்டனில் உள்ள இந்திய உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான விரிவான காரணத்தைக் கேட்டிருக்கிறார். இந்நிலையில், அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதாகவும், அதன் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இங்கிலாந்து அழுத்தம், எதிர்க்கட்சிகள் அழுத்தம் போன்றவற்றால் அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications