Sudha MP: நகை பறிப்பை விட! டெல்லி போலீஸார் கேட்டது அதிர்ச்சியாக இருக்கு! சுதா எம்பி வேதனை
டெல்லி: எனது தங்க சங்கிலியை பறித்துச் சென்ற அதிர்ச்சியை காட்டிலும் நாங்கள் உதவிக்கு அழைத்த போது எந்த போலீஸாரும் வராதது பேரதிர்ச்சியாக இருக்கிறது என மயிலாடுதுறை எம்பி சுதா விவரித்துள்ளார். இன்று காலையில் வாக்கிங் சென்ற போது அவருக்கு நடந்தது என்ன என்பது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நிகழ்த்திய செய்தியாளர் சந்திப்பில் சுதா எம்பி கூறியதாவது: நானும் சல்மா எம்பியும் இன்று காலை நடைப்பயிற்சிக்குச் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் தமிழ்நாடு கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தோம்.

நாங்கள் வாக்கிங் சென்ற இடம் மிகவும் பாதுகாப்பான இடம். அந்த பகுதியில் தூதரக அலுவலகங்கள் நிறைந்த பகுதி. அந்த வழியாக நிறைய வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்ததால் நாங்கள் நடைபாதையின் ஓரமாக சென்றோம்.
தலையில் ஹெல்மெட்
அப்போது எங்கள் எதிரே ஸ்கூட்டரில் ஒருவர் வந்தார். அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார். அவரது முகம் கூட தெரியவில்லை. அவர் மெதுவாக வந்து கொண்டிருந்தார். நான் அவருக்கு வழிவிட ஒதுங்கும் போது என் கழுத்தில் இருந்த செயினை பறித்தார். நான் என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அவர் செயினை பறித்துக் கொண்டார். பின்னர் நாங்கள் உதவிக்கு அழைத்த போது கூட அவர் ஏதோ சாதித்துவிட்டது போல் மெதுவாகத்தான் சென்றார். நகையை திருடிக் கொண்டு வேகமாக தப்பவில்லை.
உதவி கேட்ட எம்பி
என்னுடன் இருந்த சல்மா எம்பியும் "ஹெல்ப் ஹெல்ப்" என சப்தமிட்டார். அங்கு நிறைய பேர் இருந்தும் யாரும் எங்களுக்கு உதவ வரவில்லை. உடனே நாங்கள் தமிழ்நாடு இல்லத்தை நோக்கி சென்றோம். அப்போது 2 நிமிடங்கள் நடந்து சென்றதும் அங்கு டெல்லி போலீஸ் ரோந்து வாகனம் இருந்தது.
காவல் அதிகாரிகள்
அதில் இரு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் நாங்கள் போய் நகை பறிப்பு விஷயத்தை சொன்னோம். அப்போது என் கழுத்தில் சிராய்ப்பு இருந்தது, என் ஆடை லேசாக கிழிந்திருந்தது. இதையெல்லாம் பார்த்தும் அந்த அதிகாரி, எங்களுக்கு உதவுவார் என நினைத்தோம்.
போன் நம்பர்
ஆனால் அவரோ எங்கள் பெயரையும் போன் நம்பரையும் கொடுங்கள். தகவல் கிடைத்தால் சொல்கிறோம் என சொல்லிவிட்டார். அந்த செயின் திருடிய நபர் மிகவும் மெதுவாகத்தான் தப்பினார். இந்த இரு அதிகாரிகளும் வாக்கிடாக்கியில் தகவல் சொல்லி மற்ற காவல் துறை அதிகாரிகளை அலர்ட் செய்திருந்தால் அந்த நபர் ஏதாவது சிக்னலிலாவது சிக்கியிருப்பார். ஆனால் அவர் அதையெல்லாம் செய்யாமல் மிகவும் கூலாக இருந்தார். ஒரு எம்பிக்கே தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்மணியின் நிலை என்ன? அதிலும் ஒரு பெண் ஆளும் மாநிலம் இது. இங்கு பெண்களுக்கே பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறு சுதா எம்பி தெரிவித்தார்.
அமித்ஷாவுக்கு கடிதம்
மேலும் அவர் கூறுகையில், "இதே தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அங்கிருந்தவர்கள் எல்லாம் உதவிக்கு வருவார்கள். போலீஸார் உடனே புகாரை எடுத்துக் கொண்டு மர்மநபரை பிடிக்கும் செயல்களில் இறங்கியிருப்பார்கள் என சுதா தெரிவித்தார். இந்த செயின் பறிப்பு குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சுதா எம்பி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உயர் பாதுகாப்பு மிக்க பகுதியிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்றால் இங்கு பாதுகாப்பு குறைபாடு என்றுதானே அர்த்தம் என குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications