கெஜ்ரிவால் வீட்டில் பெண் எம்பி தாக்கப்பட்டது உண்மைதான்.. போட்டு உடைத்த ஆம் ஆத்மி! பாய்ந்து வந்த பாஜக
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலை பார்க்க சென்ற ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா எம்பி ஸ்வாதி மாலிவாலிடம், கெஜ்ரிவாலின் தனி செயலாளர் தவறாக நடக்க முயன்று இருக்கிறார்.. இது கண்டனத்திற்கு உரியது என ஆம் ஆத்மி கட்சியின் சஞ்செய் சிங் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளராக இருந்து வருபவர் பிபவ் குமார். கெஜ்ரிவால் இல்லத்தில் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று காலை 10 மணியளவில், ஆம் ஆத்மி கட்சி எம்.பி ஸ்வாதி மாலிவால் டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரால் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
சுவாதி மாலிவால், முதல்வரின் முன்னாள் தனி உதவியாளரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. கெஜ்ரிவாலின் பி.ஏ பிபவ் குவார், சுவாதி மாலிவாலை அடித்தாரா? இதற்கு முதல்வர் அலுவலகம் விளக்கம் அளிக்குமா? என பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் சமயத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில், ஸ்வாதி மாலிவாலிடம் கெஜ்ரிவால் தனி செயலாளர் தவறாக நடந்து கொண்டது உண்மைதான் என்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சஞ்செய் சிங் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சஞ்செய் சிங் கூறியதாவது:- அரவிந்த் கெஜ்ரிவாலை பார்க்க நேற்று ஸ்வாதி மாலிவால் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது வரவேற்பு அறையில் கெஜ்ரிவாலை பார்க்க ஸ்வாதி மாலிவால் காத்திருந்த போது, பிபவ் குமார் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார்" என்றார். டெல்லி முதல்வர் இல்லத்திலேயே பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதும் இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி மூடி மறைக்க முயற்சிப்பதையும் கண்டனத்திற்குரியது என்று பாஜக சாடியுள்ளது.
அரசியல் அழுத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் ஸ்வாதி மாலிவால் அமைதியாக இருக்கிறார்... ஒட்டு மொத்த விவகாரத்தையும் மூடி மறைக்க முயற்சி நடக்கிறது என்றும் டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்சாதேவ் கூறியுள்ளார். ஆம் ஆத்மியின் பெண் எம்பி, ஒருவர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் மீது முன்வைத்த புகார டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications