ஆப்கானில் யார் அதிபர்?.. ஹக்கானியுடனான மோதலில் தலிபான்களின் தலைவர் அப்துல் கானி பராதர் காயம்?
டெல்லி: ஹக்கானி அமைப்பின் தலைவர் ஆனஸ் ஹக்கானியுடன் ஏற்பட்ட மோதலில் தலிபான்களின் இணை தலாவர் முல்லா பராதர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அறிந்த பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய காபூல் நகருக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
ஆப்கானிஸ்தான் 20 ஆண்டுகள் கழித்து தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பது, துப்பாக்கிச் சூடு நடத்தி அட்டூழியம் செய்வது போன்ற செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் அங்கிருந்து தப்பித்தால் போதும் என நினைத்து அந்நாட்டு மக்கள் அண்டைய நாடுகளுக்கு கால் நடையாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தலிபான்கள் ஆட்சி அமைப்பது தொடர்பாக அவர்களுக்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

அறிவிப்பு
புதிய அரசு தொடர்பான அறிவிப்பு நேற்று முன் தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தலிபான் அமைப்பினர் கூறுகையில் புதிய அரசு மற்றும் அமைச்சரவையில் யார் யார் என்பது குறித்த விவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றனர்.

அதிபர் பதவி
முல்லா அப்துல் கனி பராதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்பதவியை வழங்குவதில் பாகிஸ்தான் விரும்பவில்லை. ஆனால் தலிபான்களில் உள்ள முக்கிய குழுவான ஹக்கானி பாகிஸ்தானுடன் தொடர்பில் இருக்கிறது. இதனால் ஹக்கானி குழுவுக்கு ஆப்கானில் அமையும் புதிய அரசில் முக்கியத்துவம் அளிக்க பாகிஸ்தான் விரும்புகிறது.

ஹக்கானி குழு
இந்த நிலையில் ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானியுடன் ஏற்பட்ட மோதலில் தலிபான்களின் இணை தலைவர் முல்லா அப்துல் கனி பராதருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.

யார் ஆட்சி
இருவரில் யார் ஆட்சி அதிகாரத்தை பெறுவது என்ற போட்டியின் போது இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்ததும் பிரச்சினையை சுமூகமாக தீர்க்கவும் ஹக்கானி குழுவுக்கு புதிய ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றுத் தரவும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ். தலைவர் பைஸ் ஹமீது காபூல் நகருக்கு சென்றுள்ளார்.

வீடியோ
இந்த மத்தியஸ்தம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஹமீது கூறுகையில் நீங்கள் கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகும் என தெரிவித்துள்ளார். தலிபான்கள் தலைவரை நீங்கள் சந்தித்து ஆலோசனை நடத்துவீர்களா என ஹமீத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், அவர் காபூலுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கானை பார்த்தார். பின்னர் ஹமீது கூறுகையில் நான் இப்போதுதான் காபூல் வந்துள்ளேன். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவவும் ஸ்திரத்தன்மை நிலைக்கவும் பணியாற்றி வருகிறோம் என்றார்.

மோதல் போக்கு
இந்த மோதல் போக்கால் தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தலிபான் அமைப்பில் பெரும்பாலும் பஷ்துன் இனத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் உள்ளனர். இதனால் புதிய அரசில் அந்த இனத்தை சேர்ந்தவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இதற்கு மற்ற குழுக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து புதிய அரசில் பஷ்துன் இனம் அல்லாதவர்களையும் சேர்க்க தலிபான்கள் விரும்புகின்றனர். மேலும் ஏற்கெனவே தலிபான் அரசில் இடம் பெற்றிருந்த முன்னாள் பஷ்துன் மற்றும் பஷ்துன் அல்லாத இனத்தவர்களை சேர்க்க தலிபான்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். அவர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க தலிபான் மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவையும் தலிபான் ஆட்சி அமைய தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications