வெடிகுண்டு மிரட்டலால் பதறிய பயணிகள்.. மும்பை - நியூயார்க் சென்ற விமானம் டெல்லியில் தரையிறக்கம்
டெல்லி: மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து இந்த விமானம் பாதுகாப்பு காரணத்திற்காக அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலால் பயணிகள் பீதியடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை நியூயார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானம் பயணிகளோடு புறப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து விமானம் கிளம்பியது. ஏர் இந்தியாவின் ஏஐ 119 என்ற விமானம் மும்பையில் இருந்து நியூயார் நகருக்கு நடுவானில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக விமானிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் ஏர் இந்தியா விமானத்தை உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக டெல்லி விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் அவசர அவசரமாக இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பிதியில் உறைந்த பயணிகள் அனைவரும் டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவசர அவசரமாக கீழே இறங்கினர். இதன் பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இதையடுத்து விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதிகாலையில் அமெரிக்காவின் நியூயார்க் செல்ல இருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பயணிகள் அனைவரையும் மாற்று விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த மாதம் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலையடுத்து மும்பையில் இருந்து புறப்பட்ட விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications