"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு
டெல்லி: தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஓபிசி இட ஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு வழங்குவதாக பாஜக எம்பி லக்ஷமன் நாடாளுமன்றத்தில் விமர்சித்தார். இதன் மூலம் உண்மையான பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்காமல் போவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடந்து வருகிறது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கே. லக்ஷ்மன் கூறியுள்ள சில கருத்துகள் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழகம்
தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நிபந்தனைகளை மீறுவதாகக் கூறிய லக்ஷமன், இந்த மாநிலங்கள் எல்லா முஸ்லிம்களையும் ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்த்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், மாநிலங்களவையில் இருந்த எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
ராஜ்யசபாவில் ஜீரோ ஹவர் விவாதத்தில் நேரத்தில் பேசிய லக்ஷ்மன், மதத்தின் பெயரால் ஓபிசி இட ஒதுக்கீடு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது மத அடிப்படையில் ஒதுக்கீடுகளை வழங்காத நிலையில், தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இந்த கொள்கையை அப்பட்டமாக மீறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்த விவகாரம் குறித்து விரிவான மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
ஓபிசி இட ஒதுக்கீடு
ஓபிசி இட ஒதுக்கீட்டை அனைத்து முஸ்லிம்களுக்கும் விரிவுபடுத்தும் நடைமுறையைக் கேள்விக்குள்ளாக்கிய ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் லக்ஷ்மன் மேற்கோள் காட்டினார். லக்ஷமனின் இந்த கருத்துகளுக்கு அவர் பேசும்போதே எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூச்சல்களுக்கு மத்தியில் பேசிய அவர், "சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கான ஓபிசி இட ஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் சில மாநிலங்கள் வழங்குகின்றன. அரசியல் லாபத்திற்காகவும் வாக்கு வங்கி அரசியலுக்காகவும் இதைச் செய்கிறார்கள்.
மறுக்கப்படுகிறது
இதனால் உண்மையான பின்தங்கிய சமூகங்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பங்கு மறுக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள மாநில அரசு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஒரே சாதியாகக் கருதி, அவர்களுக்காக 4% சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இதேபோல, மேற்கு வங்கத்தில் 97% முஸ்லிம் மக்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள முஸ்லிம் பிரிவினருக்குக் கணிசமான ஓபிசி சலுகைகள் வழங்கப்படுகிறது. தெலங்கானா அரசு முஸ்லிம்களுக்கு 4% பிரத்தியேக இட ஒதுக்கீடு வழங்க முயன்றபோது, உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்தது. அத்தகைய மத அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் குறித்து விரிவான மறு ஆய்வு நடைபெற வேண்டும்" என்று தெரிவித்தார்.
எதிர்ப்பு
லக்ஷமனின் இந்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பை மத்திய அமைச்சரும், அவைத் தலைவருமான ஜே.பி. நட்டா கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகள், குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி, இந்திய அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு உரிய மரியாதையை அளிப்பதில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். மக்கள் நலன் சார்ந்த விவாதங்களில் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வமும் இல்லை என்றும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை அவை மதிப்பதில்லை என்றும் நட்டா குறிப்பிட்டார். முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே எதிர்க்கட்சிகள் கருதுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு 2010 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் முஸ்லிம்களை ஓபிசி பட்டியலில் சேர்த்ததற்காக பாஜக விமர்சித்துள்ளது. கர்நாடகாவில், காங்கிரஸ் அரசு ஓ.பி.சி. ஒதுக்கீட்டின் கீழ் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவும் பாஜக ஏற்கெனவே எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications