ரோட்டில் கிடந்த பாகிஸ்தான் கொடி.. கையில் எடுத்ததற்காக பள்ளியை விட்டு இடைநிறுத்தப்பட்ட சிறுமி!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ரோட்டில் கிடந்த பாகிஸ்தான் நாட்டின் கொடியை கையில் எடுக்க சிறுமி ஒருவர் முயற்சித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ பரவலாக ஷேரான நிலையில், தற்போது சிறுமி பள்ளியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்.
சங் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு அழுத்தம் கொடுத்ததால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஹரன்பூரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 11ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் ஸ்கூட்டியில் சென்றுக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது ரோட்டில் யாரோ பாகிஸ்தான் கொடி ஒன்றை நட்டு வைத்திருப்பதை பார்த்திருக்கிறார். அந்த கொடியை கையில் எடுக்க சிறுமி முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. வெறும் கையோடு அவர் திரும்ப சென்றுவிட்டார். ஆனால் இந்த சம்பவம் முழுவதும் வீடியோவாக பதிவாகியிருக்கிறது. அது சோஷியல் மீடியா முழுவதும் ஷேராகியிருந்தது.
இதனையடுத்து பள்ளியை விட்டு சிறுமியை நிறுத்த வேண்டும் என்று சங் பரிவார் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்த அழுத்தம் காரணமாக சிறுமி பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டிருக்கிறார். இது கடும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, உ.பியின் அலிகார் பகுதியில் முஸ்லீம் சிறுவன் ஒருவன் தரையில் கிடந்த பாகிஸ்தான் கொடியை எடுத்திருக்கிறான். இதை பார்த்த இந்துத்துவா அமைப்பினர், அக்கொடியின் மீது சிறுநீர் கழிக்க சிறுவனை வற்புறுத்தியுள்ளனர்.
இதுபற்றி சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஏற்கெனவே இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் கொடியை வைத்து இந்துத்துவா அமைப்பினர் மேற்கொள்ளும் சில செயல்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைக்கு காரணம்:
கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு 'தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்' எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லக்ஷர் இ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் கிளையாகும். இவற்றிக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உதவுவதாக சொல்லப்படுகிறது. இப்படியாக இந்த தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடர்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடநவடிக்கைகளும், இந்தியாவுக்கு எதிராக அந்நாடு எடுத்து வரும் நடவடிக்கைகளும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications