"சமூக நீதி".. முஸ்லீம் இட ஒதுக்கீடு குறித்த கேள்வி! சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் திட்டவட்டம்
டெல்லி: மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதமானது என பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில், என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் அதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரபல ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாரா லோகேஷ்: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஒடுக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் இன்று தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது மட்டுமின்றி அங்குள்ள 16 லோக்சபா இடங்களை வென்று மத்தியில் என்டிஏ கூட்டணியில் மிக முக்கிய கட்சியாகத் தெலுங்கு தேசம் உருவெடுத்துள்ளது.
சமூக நீதி: ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் எனத் திட்டவட்டமாகக் கூறிய லோகேஷ், அது திருப்திப்படுத்தும் அரசியல் இல்லை அதுதான் சமூக நீதி என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது.. இதை நாங்கள் ஆதரிக்கிறோம்.. இதை நாங்கள் தொடரவே போகிறோம்.
இட ஒதுக்கீடு என்பது திருப்திப்படுத்தும் அரசியல் இல்லை.. ஆந்திராவில் சிறுபான்மையினரின் தனிநபர் வருமானம் தான் மிகக் குறைவாக இருக்கிறது. ஒரு அரசின் பொறுப்பு வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது தான்.. எனவே, இது திருப்திப்படுத்தும் அரசியல் இல்லை. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் அரசியல்.. சமூக நீதியை நிலைநாட்டவே அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற விரும்பினால்.. நாம் யாரையும் புறந்தள்ளிவிட முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற முடியும்.. அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வதே தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாடு" என்று அவர் தெரிவித்தார்.
முக்கியம்: ஆந்திராவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் தெலுங்கு தேசம் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அதற்கு நாரா லோகேஷ் பங்கு முக்கியமானது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட பிறகு, லோகேஷ் மாநிலம் முழுக்க சுமார் 4,000 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து. இது தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.
தனது தந்தை கைது குறித்துப் பேசிய அவர், "அரசியல் பழிவாங்கல் காரணமாகவே எனது தந்தை கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக அவரை 52 நாட்கள் சிறையில் வைத்திருந்தனர். சட்டத்தின் முன்பு இங்கு அனைவருமே சமம் தான்.. பழிவாங்கும் அரசியலுக்கு இந்தியாவில் இடமில்லை" என்றார்.
நிதி தேவை: தொடர்ந்து மத்தியில் அமையும் ஆட்சி குறித்துப் பேசிய அவர், "நாங்கள் எப்போதும் இந்த பதவி வேண்டும்.. அந்தப் பதவி வேண்டும் எனக் கேட்டதே இல்லை.. மாநிலத்திற்கு அதிக நிதி தேவை என்ற அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.. அமைச்சர் பதவிகளில் எங்களுக்கு ஆர்வம் இல்லை.. மாநில நலனே முக்கியம்.
வலுவான மாநிலங்கள் இணைந்தே வலுவான நாடுகளை உருவாக்குகின்றன. ஆந்திரா மாநிலம் 1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். என்டிஏ கூட்டணியில் இணைந்து பயணிக்கவே விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications