ஹை டென்சனில் பாஜக.. டெல்லி சலோவுக்கு படையெடுத்த விவசாயிகள்! சாலையில் ஆணி அடித்த அரசு -நாளை போராட்டம்
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாளை விவசாயிகள் தொடங்கும் 'டெல்லி சலோ’ போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களை தடுக்க சாலைகளில் ஆணிகளை வைத்து உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2022 ஆம் ஆண்டு விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்களை போன்று நாளை விவசாயிகள் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். “டெல்லி சலோ” என்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கத்தை பெயராக கொண்டு நடக்கவிருக்கும் இந்த மாபெரும் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டு உள்ளார்கள்.

3 வேளாண் சட்டங்களைதான் மத்திய அரசு ரத்து செய்துவிட்டதே.. பிறகு ஏன் இந்த போராட்டம் என்ற கேள்வி எழலாம். 3 வேளாண் சட்டங்கள் என்பது மத்திய அரசு அதை இயற்றிய பிறகு உருவெடுத்த பிரச்சனைதான். ஆனால், அதை விட இந்திய விவசாயிகள் பல ஆண்டுகால கோரிக்கையாக இருப்பது விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது. இதற்காக நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இத்துடன் சேர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் மீண்டும் தொடர் போராட்டத்தை நாளை தொடங்க ஆயத்தமாகி உள்ளார்கள் விவசாயிகள். குறிப்பாக டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே டெல்லிக்கு சென்று போராட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். கிசான் மஜ்தூர் மோர்ச்சா, சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட 200 க்கும் அதிகமான விவசாய அமைப்புகள் இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
டெல்லி நோக்கிச் செல்லுங்கள் என்று அர்த்தம் தரும் பெயர் கொண்ட இந்த போராட்டத்தில் அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்பதற்காக டெல்லிக்கு புறப்பட்டபடி இருக்கிறார்கள். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் பல மாநிலங்களின் விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டம் ஆளும் மத்திய பாஜக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த போராட்டத்தை தொடங்க விடாமல் செய்ய பல்வேறு பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மறுபக்கம் டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்படும் விவசாயிகளை தடுப்பதற்காக, டயர்களை பஞ்சர் செய்யும் வகையில் ஆணிகளை வைத்து உள்ளார்கள். தொடக்கத்தில் பாஜக ஆளும் அரியானா மாநில அரசு இதை செய்த நிலையில், பல்வேறு மாநிலங்களின் டெல்லி எல்லையிலும் இதுபோன்ற ஆணிகள் வைக்கப்பட்டு உள்ளது. இது அல்லாமல் இரும்பு வேலி தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
போராட்டத்தின் தீவிரத்தை கட்டுப்படுத்த டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பஞ்சாபில் இருந்து 2,000 டிராக்டர்கள், உத்தரப்பிரதேசத்தில் இருந்து 500 டிராக்டர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 200 டிராக்டர்கள் என விவசாயிகள் டெல்லி எல்லைகளை சுற்றிவளைக்க முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications