நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி ஜூன் 13-ல் ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் ஜூன் 13-ந் தேதி மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை புது சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பங்கு பரிமாற்ற வழக்கில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளது என்பது அமலாக்கத்துறை வழக்கு. இவ்வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி விசாரணைக்கு ஜூன் 8-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் ராகுல் காந்தி தாம் வெளிநாடு சென்றிருப்பதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கோரியிருந்தார். இதனையடுத்து இன்று அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு புது சம்மன் அனுப்பி உள்ளது அதில், ஜூன் 13-ந் தேதி ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சோனியா சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து வரும் 8-ந் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா ஆஜராவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சோனியா காந்தியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியைத் தொடர்ந்து அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடு விடுதலைக்கு முன்னர் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம், ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகி வந்தது. இப்பத்திரிகை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின் 2010-ல் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா, ராகுல் வசம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.












Click it and Unblock the Notifications