சோனியா- ராகுலின் ரூ.661 கோடி சொத்துகள் பறிமுதல்.. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு சொந்தமான ரூ.661 கோடி சொத்துகளை கைப்பற்ற அமலாக்கத்துறை தயாராகி உள்ளது. இதற்கான நோட்டீஸ் என்பது டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமலாக்கத்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.
நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் தொடங்கிய பத்திரிகையின் பெயர் நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிகை என்பது நேருவின் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் மூலம் நடத்தி வரப்பட்டது. அதன்பிறகு கடன் பிரச்சனையால் இந்த நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மூடப்பட்டது. மேலும் பிரச்சனையை சரிசெய்ய காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியது.

இதற்கிடையே தான் கடந்த 2014ம் ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்கு சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர். இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் என்று கூறினார். அதுமட்டுமின்றி டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வழக்கை விசாரிக்க அனுமதி வழங்கியது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகார் வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை உள்ளே வந்தது. இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தி, சோனியா காந்தி மறுத்தனர். ஆனால் அமலாக்கத்துறை இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தது. இருவரிடமும் பலகட்டமாக விசாரணை என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணையை தொடர்ந்து அமலாக்கத்துறை மொத்தம் ரூ.988 கோடி மதிப்பிலான சொத்துகளில் மோசடி நடந்துள்ளதாக கூறுகிறது. இதற்கிடையே தான் தற்போது அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது வழக்கு தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தொடர்புடைய சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் அமலாக்கத்துறை தொடங்கி உள்ளது.
அதன்படி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் இருந்து சோனியா - ராகுல் காந்தியின் பெயரில் 76 சதவீத பங்குகள் உள்ள ‛யங் இந்தியா' நிறுவனத்தின் சொத்துகள் டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ளன. இதனால் 3 நகரங்களின் சொத்து பதிவாளர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் என்பது நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.661 கோடி மதிப்பிலான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் சொத்துகள் அமலாக்கத்துறை வசம் செல்ல உள்ளது.












Click it and Unblock the Notifications