8 தீம்.. தினம் 30 நிமிடம் தேசநலன் நிகழ்ச்சி கட்டாயம்.. சேனல்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..ஏன்?
டெல்லி: இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி சேனல்களில் தினமும் அரை மணிநேரம் நாடு அல்லது பொதுமக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நிகழ்ச்சிகளை உருவாக்க 8 தீம்களை மத்திய அமைச்சகம் வழங்கிய நிலையில் இதனை பின்பற்றாவிட்டால் விளக்கம் கேட்கப்படும் என அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிரப்புத்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இந்த துறை சார்ந்து புதிய வழிக்காட்டுதல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் செய்வதற்கான 2022ம் ஆண்டுக்கான வழிக்காட்டுதல்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரைமணிநேரம் நிகழ்ச்சி
இதன்மூலம் தேசிய மற்றும் பொதுமக்களின் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிக்காட்தல்களின் படி தினமும் நாடு சார்ந்த அல்லது பொதுமக்களின் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த வழிக்காட்டுதல்கள் நவம்பர் 9 முதல் அமலுக்கு வந்தாலும் கூட இதுபோன்ற நிகழ்ச்சிகளை உருவாக்க சேனல்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 தீம்கள் வழங்கல்
புதிய வழிகாட்டுதல்களின்படி, பொதுசேவை மற்றும் தேசிய நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை சேனல்களில் குறைந்தபட்சம் 30 நிமிடம் வரை ஒளிபரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை உருவாக்காக மொத்தம் 8 தீம்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தீம்களின் அடிப்படையில் நிகழ்ச்சி இருக்க வேண்டும்.

என்னென்ன தீம்கள்
அதன்படி கல்வி சார்ந்த நிகழ்ச்சி, விவசாயம்-கிராமப்புற மேம்பாடு, உடல்நலன் மற்றும் குடும்ப நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மகளிர் நலன், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலன், சுற்றுச்சூழல்-கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல், தேச ஒருங்கிணைப்பு என 8 தீம்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தீம்களின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும். இது சேனலை அப்லிங் செய்வதற்கும், டவுன்லிங்க் செய்வதற்கும் (இந்தியாவில் மட்டும் டவுன்லிங்க் செய்யப்பட்ட வெளிநாட்டு சேனல்களை தவிர) இந்த வழிக்காட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

துறை செயலாளர் கூறுவது என்ன?
இதுபற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா கூறுகையில், ‛‛தற்போதைய வழிக்காட்டல் குறித்து சேனல் ஒளிபரப்பு செய்பவர்கள் பிற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து நிகழ்ச்சியை தயார் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை கட்டாயமாக செயல்படுத்த வேண்டிய தேதி, நேரம் ஆகியவை விரைவில் அறிவிப்பு செய்யப்படும். அதன்பிறகு பின்பற்றாவிட்டால் அதுபற்றி விளக்கம் கேட்கப்படும்.

விதிவிலக்கு யாருக்கு?
இந்த கட்டுப்பாடுகளில் இருந்து சில சேனல்களுக்கு விதிவிலக்கு கிடைக்கும். உதாரணமாக விளையாட்டு சேனல்களில் தொடர்ந்து லைவ் போட்டி நடக்கும் போது அந்த சேனல்கள் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விதிவிலக்கு அளிக்கப்படும். அதேபோல் வனவிலங்கு சேனல்களில் லைவ் காட்சிகள் செல்லும்போதும் விதிவிலக்கு வழங்கப்படும். விதிவிலக்கு என குறிப்பிடப்பட்டவை தவிர அனைத்து சேனல்களும் இந்த நிபந்தனை பொருந்தும். இதுதொடர்பான விரிவான விபரம் விரைவில் வெளியிடப்படும்'' என்றார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் என மத்திய அமைச்சகம் நம்புகிறது.

சிக்னல் என்க்ரிப்ட் கட்டாயம்
மேலும் சி-பேண்ட் தவிர பிற சிக்னல்களில் (அலைவரிசை)அப்லிங்க் செய்யும் தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் சிக்னல்களை என்க்ரிப்ட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சேட்டிலைட் தொலைக்காட்சி சேனலை அப்லிங்கிங் மற்றும் டவுன்லிங்க் செய்வதற்கும் புதிய வழிக்காட்டல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பதிவு செய்த சேனல்களுக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப முன் அனுமதி தேவையில்லை என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications